லேபிள்கள்

28.11.14

தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுக் கடன் உச்ச வரம்பு 50 சதவீதமாக உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுமனைக் கடன் உச்சவரம்பை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கடன் உச்சவரம்புத் தொகையானது, மூன்று தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் வீட்டுமனை வாங்குவதற்கான கடன் தொகையின் உச்சவரம்பை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று, கடன் தொகையின் உச்சவரம்பானது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை வீட்டுக் கடன், முன்பணத் தொகை பெறாத அரசு ஊழியர்கள் அவற்றைப் பெற்றிட வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வீட்டுக் கடன் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.12.5 லட்சமாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை (பொறுப்பு) செயலாளர் பணீந்திர ரெட்டி புதன்கிழமை பிறப்பித்தார்.

மூன்று தவணைகள் எப்படி? வீட்டு கடன் பெற தகுதி படைத்தவர்களுக்கு மூன்று தவணைகளாக கடன் தொகைகள் வழங்கப்படும். முதல் தவணையாக, அனுமதிக்கப்பட்ட மொத்த கடன் தொகையில் 50 சதவீதத் தொகை அல்லது வழிகாட்டி மதிப்பின்படி ஒரு நிலத்தின் மதிப்பு அல்லது விண்ணப்பதாரர் கோரிய தொகை ஆகியவற்றில் எது குறைவோ அந்தத் தொகை முதல் தவணையாக அளிக்கப்படும்.

இதன்பின், வீட்டுக் கூரை வரை கட்டுமானத்தை எழுப்புவதற்காக இரண்டாவது தவணைத் தொகை அளிக்கப்படும். அது அனுமதிக்கப்பட்ட மொத்த கடன் தொகையில் பாதியாக இருக்கும். இறுதி மற்றும் மூன்றாவது தவணைத் தொகையானது கட்டுமானம் முழுவதையும் முடிப்பதற்காக அளிக்கப்படும். இந்த மூன்று தவணைத் தொகைகளும் 10 மாதங்களுக்குள் அளிக்கப்பட வேண்டும். அதாவது முதல் தவணைத் தொகை 2 மாதங்களுக்குள், அடுத்தடுத்த தவணைத் தொகைகள் தலா 4 மாத இடைவெளிகளுக்குள்ளும் அளிக்கப்பட வேண்டும்.

முதல் தவணைத் தொகையைப் பெற்ற அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்த நிலத்தில் வீட்டுக்கான கட்டுமானத்தைத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் அதனை அரசு அடமானத்தில் எடுத்துக் கொள்ள விண்ணப்பதாரர் சம்மதிக்க வேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலக சங்கம் நன்றி: தங்களது கோரிக்கையை ஏற்று, வீட்டுக் கடனுக்கான உச்சவரம்பினை உயர்த்தியதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை சங்கத்தின் தலைவர் எஸ்.பீட்டர் அந்தோனிசாமி வெளியிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக