லேபிள்கள்

23.11.14

அரசு ஊழியர், அதிகாரிகள் பாஸ்போர்ட் பெற புதிய கட்டுப்பாடுகள்: தமிழக அரசு உத்தரவு

வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பாஸ்போர்ட் பெற விரும்பும் தமிழக அரசு ஊழியர்கள் - அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வோருக்கு மட்டுமே தடையின்மைச் சான்று வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கென சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு வகுத்துள்ளது.
அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் பாஸ்போர்ட் பெறுவதற்கு அரசிடம் இருந்து தடையின்மைச் சான்று, அடையாளச் சான்றினைப் பெறுவது அவசியமாகும். அவ்வாறு பெற்ற பிறகே அவர்கள் புதிதாக பாஸ்போர்ட் பெறவும், காலாவதியான பாஸ்போர்ட்டைப் புதுப்பிப்பதற்கு விண்ணப்பிக்கவும் முடியும்.

இந்தச் சான்றிதழ்களில் விண்ணப்பதாரரின் புகைப்படம் ஒட்டப்பட்டு சான்று அளிக்கும் அதிகாரி கையெழுத்திட வேண்டும். அதற்கு முன்பாக, அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை உறுதி செய்திட வேண்டும். அந்தக் கட்டுபாடுகளின் விவரம்:

வெளிநாடுகளில் கல்வி பயிலவோ, பயிற்சிகளை மேற்கொள்ளவோ செல்ல விரும்பும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் உரிய அனுமதியை அரசிடம் இருந்து பெற வேண்டும். வெளிநாட்டுப் பயணத்தின் போது அதற்காகும் செலவினங்களை அரசுத் துறையோ அல்லது அரசோ ஏற்றுக் கொள்ளாது. பயணத்துக்காக அரசு ஊழியரோ அல்லது அதிகாரியோ ராஜிநாமா கடிதங்களை அளித்திட முடியாது. அவ்வாறு செய்வது ஏற்றுக் கொள்ளப்படாது. வெளிநாட்டுப் பயணத்தின் போது எந்தவித வர்த்தகத்தையோ, வணிகத் தொடர்புகளையோ மேற்கொள்ளக் கூடாது. அவ்வாறு செய்வது ஏற்றுக் கொள்ளப்படாது.

வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் போது, பயண விடுப்புக்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அரசுத் துறையின் தலைவரிடம் அளிக்க வேண்டும். விடுப்புக்குத் தகுதி என்ற பட்சத்தில் உயர் அதிகாரியின் அனுமதி கிடைத்த பிறகே பயணத்தைத் தொடங்க வேண்டும்.

பாஸ்போர்ட்டுக்காக அரசால் வழங்கப்படும் அடையாளச் சான்றின் காலம் ஆறு மாதங்கள் மட்டுமே ஆகும். அதன்பிறகு அது காலாவதியாகி விடும். தமிழக அரசு வகுத்துள்ள இந்தக் கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் அரசு அலுவலர், அதிகாரிகளுக்கே பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்குத் தேவையான அடையாளச் சான்றும், தடையின்மைச் சான்றும் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக