லேபிள்கள்

23.11.14

ஆசிரியர்களுக்கான மாத சம்பளத்தை பள்ளிநிர்வாகத்திடமே தரவேண்டும் - சென்னை உயர் நீதி மன்றம்

அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான மாதசம்பளத்தை சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடமே தரவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
புரசைவாக்கத்தில் அரசுஅங்கீகாரம் பெற்ற சர்.எம்.சிடி.முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கான மாத சம்பளம் அரசிடமிருந்து நேரடியாக வழங்கப்படுகிறது. இது விதிகளுக்கு முரணானது. எனவே, ஆசிரியர்களுக்கானசம்பளத்தை பள்ளி நிர்வாகத்திடம்தான் வழங்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் எனக்கோரி பள்ளி தாளாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு நீதிபதி ராமசுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: கடந்த 2011முதல் இந்த பள்ளியின் நிர்வாகத்திற்கும், இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது, ஆசிரியர்களின் ஏற்பாட்டால் மாணவர்கள்கடந்த 2011 செப்டம்பரில் பள்ளி புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, பள்ளிக்கல்வி இணை இயக்குனர், தலைமை கல்வி அதிகாரி ஆகியோர் இந்த பள்ளிக்கு வந்து ஆய்வு நடத்தினர். கடந்த 2012 பிப்ரவரி 29ல் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், பள்ளி வளாகத்தில் போராட்டங்களை நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து, பள்ளி நிர்வாகம் நீதிமன்றத்தை நாடி போராட்டத்துக்கு இடைக்கால தடை பெற்றது.இதையடுத்து, பிப்ரவரி 29ம் தேதி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பள பணம் நேரடியாக வழங்கப்படும் என்று மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார். அதன்பின் அவர் அந்த பள்ளியில் 2013 அக்டோபர் 7ம் தேதி ஆய்வு மேற்கொண்டார். பள்ளியின் தரத்தை உயர்த்த ரூ.13 லட்சத்துக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதாக பள்ளியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நேரடியாக சம்பளத்தை வழங்கும் முடிவை ரத்து செய்யுமாறு தலைமை கல்வி அதிகாரிக்கு மாவட்ட கல்வி அதிகாரி பரிந்துரை செய்தார். ஆனால், அதை தலைமை கல்வி அதிகாரி நிராகரித்து உத்தரவிட்டார். 

தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) சட்டத்தின்கீழ் அந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் பள்ளியின் செயலாளரிடமே வழங்கப்பட வேண்டும். மாவட்ட கல்வி அதிகாரிதான் இந்த சம்பள பணத்தை வழங்குவதற்கான முழு அதிகாரம் படைத்தவர். அவர் ஆய்வு செய்து பரிந்துரை செய்ததை அமல்படுத்தாதது உயர் அதிகாரிகள் செய்த பெரிய தவறு. ஆசிரியர்களும், ஊழியர்களும் தாங்கள் நினைப்பதைத்தான் நிர்வாகம் செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடாது. இதை கல்வி அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது. எனவே, தலைமை கல்வி அதிகாரியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பள பணம் பள்ளி நிர்வாகத்திடம்தான் தரப்பட வேண்டும். சம்பளத்தை பிரித்து தருவதில் நல்ல நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக