கோவையில் பாடபுத்தகங்கள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் சி.இ.ஓ. ராஜேந்திரனின் முன்ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டி தள்ளுபடி செய்தது. விரைவில் அவர் கைதாவார் என்று தெரிகிறது. கடந்த 2011ம் ஆண்டில் அரசு பாடப்புத்தகங்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
கோவையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக ராஜேந்திரன் இருந்தபோது சுமார் 350 டன் பாடப்புத்தகங்கள் ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், புலியகுளம் அந்தோணியார் தொடக்கப்பள்ளியிலும் இருப்பு வைக்கப்பட்டது. 2012 அக்டோபர் மாதம் ராஜேந்திரன் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியிடமாற்றப்பட்டார்.
இந்நிலையில், புத்தகங்கள் அனைத்தும் மாயமானது. உடனடியாக, முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம் புகார் அளித்தார். இதன்பேரில் முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் சரவணக்குமார், புலியகுளம் பள்ளி தலைமையாசிரியர் லூர்து சேவியர், முதன்மை கல்வி அலுவலக துணை ஆய்வர்கள் அருள்ஜோதி, பிரின்ஸ் சாலமன், பதிவு எழுத்தர் சேதுராமலிங்கம், தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாகி கார்த்திகேயன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதியப்பட்டது. இதில், சரவணக்குமார், சேதுராமலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், இவ்வழக்கில் முன்ஜாமீன்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரன் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, சஸ்பெண்ட் செய்யப்பட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் விரைவில் கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக