லேபிள்கள்

4.3.15

8.43 லட்சம் பேர் எழுதுகின்றனர்: பிளஸ் 2 தேர்வு நாளை தொடக்கம்

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. 8 லட்சத்து 43 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத்துறை செய்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இயங்கும் 6,256 பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். 42 ஆயிரத்து 963 பேர் தனித் தேர்வர்கள். இவர்களுக்காக, தமிழகம், புதுச்சேரியில் 2,377 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 128 பள்ளிகளில் பயிலும் 6,575 மாணவர்களும், 7,731 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக, 33 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 16,947 மாணவர்கள் எழுதுகின்றனர். புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் 77 சிறை கைதிகள் தேர்வு எழுதுகின்றனர். டிஸ்லெக்சியாக, பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர உடல் ஊனமுற்றோர் சொல்வதை எழுதும் எழுத்தர் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மொழிப்பாடத்தை அவர்கள் எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு கூடுதலாக ஒரு மணி நேரமும் வழங்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 4,000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. கேள்வித்தாளை படித்துப் பார்க்க 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் 10.15 மணிக்கு விடை எழுதத் தொடங்க வேண்டும். மதியம் 1.15 மணிக்கு முடிக்க வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள் துண்டுச் சீட்டு வைத்திருத்தல், பார்த்து எழுதுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால் 2 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை தேர்வு எழுத முடியாது. கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்: தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவியர் தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக தேர்வு மைய வளாகத்துக்குள் ஹால் டிக்கெட்களுடன் சென்றுவிட வேண்டும். தேர்வு அறை யில் 15 நிமிடங்களுக்கு முன்னதாக சென்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர வேண்டும். தேர்வுஅறைக்குள், செல்போன், கால்குலேட்டர் எடுத்து செல்ல அனுமதி இல்லை.

பெல்ட், ஷூ அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும். 10 மணிக்கு விடைத்தாள் புத்தகம் வழங்கப்படும். அதன் முகப்பு பக்கத்தில் உரிய இடத்தில் மாணவர்கள் கையொப்பம்இட வேண்டும். மற்ற விவரங்களை சரிபார்க்க வேண்டும். பின்னர் கேள்வித்தாள் வழங்கப்படும். சென்னையில் மாணவர்கள்: சென்னை மாவட்டத்தில் 412 பள்ளிகளில் மூலம் 24 ஆயிரத்து 653 மாணவர்களும், 28 ஆயிரத்து 750 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக, சென்னை மாவட்டத்தில் 144 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக