லேபிள்கள்

3.3.15

தேர்வு எழுதும் பார்வையற்ற மாணவர்களுக்கு தகுதியான எழுத்தர் நியமிக்கக் கோரி வழக்கு

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் பார்வையற்ற மாணவர்களுக்கு தகுதியான எழுத்தர்களை நியமிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவுக்கு மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக சென்னை முகப்பேரைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளி சி.கோவிந்தகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மாணவர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகும். பார்வையற்ற மாணவர்கள் எழுத்தர்கள் உதவியுடன் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்கின்றனர்.

எழுத்தர்கள் வினாத்தாள்களில் உள்ள வினாவை மாணவர்களிடம் வாசித்துக்காட்டுவார்கள். அதற்கு அவர்கள் தெரிவிக்கும் பதிலை விடைத்தாள்களில் எழுத்தர்கள் எழுதுவார்கள். இதற்காக பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வுகளின் போது அதிக நேரம் வழங்கப்படுகிறது.

அறிவியல், கணிதம் ஆகிய கடினமான தேர்வுகளில் அடையாளங்கள், குறியீடுகள் அதிகம் பயன்படுத்தப்படும். இதில், கைதேர்ந்த எழுத்தர்களைப் பயன்படுத்தினால் மட்டுமே தேர்வை முறையாக எழுத முடியும். மேலும், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழித் தேர்வுகளில், அந்த மொழி குறித்த அறிவும், அடிப்படை வார்த்தைகளும் எழுத்தர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

பார்வையற்ற மாணவர்களால் ஒவ்வொரு வார்த்தைக்கும், அடையாளங்களை ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் விவரிக்க முடியாது. தகுதியற்ற எழுத்தர்களைப் பயன்படுத்தினால் அவர்கள் தவறான குறியீடுகள், அடையாளங்களை பயன்படுத்தக்கூடும்.

மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் மாற்றுத் திறனாளிகளுக்கான துறை, மாற்றுத் திறனாளிகளுக்கு எழுத்துத் தேர்வு நடத்துவது தொடர்பான வழிமுறைகள் தொடர்பான அதிகாரப்பூர்வ குறிப்பாணையை கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி அனுப்பியது.

அதில், 40 சதவீதம் அல்லது அதற்கு மேல் பாதிப்பு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு கண்டிப்பாக எழுத்தர், வாசிப்பாளர், உதவியாளரை அனுமதிக்க வேண்டும்.

தேர்வு எழுதுபவர்களைப் பொருத்து எழுத்தர்களை அனுமதிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட தேர்வர்கள், தேர்வு எழுதுவதற்கு முந்தைய நாள் எழுத்தரைச் சந்திப்பதற்கு கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான கடிதத்தையும் மாநில அரசுகளுக்கு 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி மத்திய அரசு அனுப்பியது. ஆனால், அந்த வழிமுறைகள் வெளியிடப்பட்டு ஒன்றரை ஆண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எனவே, 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவுக்கு மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக