திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறைதொடந்தால், வரும் கல்வியாண்டில், ஆங்கில வழிக்கல்வி முறை முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை
அதிகரித்தல்; பள்ளிகள் மீது பெற்றோருக்கு ஆர்வம் உண்டாக்குதல்; கல்வித்தரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, ஆங்கில வழிக்கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு, துவக்கப்பள்ளிகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
கடந்தாண்டு, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனால், மாணவர் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், இம்முறையை வெற்றிகரமாக செயல்படுத்த, ஆசிரியர்கள் கூடுதலாக தேவை என்றகோரிக்கைக்கு கல்வித்துறை தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், இக்கல்வி முறையை செயல்படுத்துவதில் ஆசிரியர்கள் மத்தியில் ஆர்வம் குறையும் நிலை உருவாகியுள்ளது.ஆங்கில வழியில் பாடம் நடத்த, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் பல்வேறுபயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இருப்பினும், அனைத்து பாடங்களையும், இரண்டு மொழிகளிலும் எடுக்க வேண்டிய கட்டாயத்தால் குழப்பம் அடைகின்றனர். தவிர, சில பள்ளிகளில், ஆங்கில வழி பாடத்தையும் தமிழில் நடத்தி விடுகின்றனர்.
இதனால், பெயரளவில் மட்டுமே ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆங்கில வழிக்கல்வியை சிறப்பாக செயல்படுத்தும் பல பள்ளிகளும், ஆசிரியர் பற்றாக்குறையால், பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனால், வரும் கல்வியாண்டில், ஆங்கில கல்வி முறையை செயல்படுத்த, திட்டமிட்ட பள்ளி நிர்வாகத்தினர், தற்போது தயக்கம் காட்டுகின்றனர்.கல்வி ஆர்வலர்கள் கூறுகையில், "அரசு பள்ளி மாணவர்கள் பயனடைய வேண்டும் என்றஎண்ணத்தால், ஆங்கில கல்விமுறை வரவேற்கப்பட்டது. அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சியை மட்டுமே கொண்டு, ஆசிரியர்கள் பாடம் நடத்துவதால், மாணவர்களுக்கு முழுமையான ஆங்கிலத்திறன் கிடைப்பதில்லை. வரும் கல்வியாண்டிலும், ஆங்கில வழிகல்விக்கு கூடுதல் ஆசிரியர் நியமிக்காவிட்டால், அத்திட்டம் முடங்குவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது" என்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக