லேபிள்கள்

5.3.15

பிளஸ் டூ தேர்வு இன்று தொடங்குகிறது : 8.86 லட்சம் பேர் எழுதுகின்றனர் : முறைகேட்டைத் தடுக்க 5,000 பறக்கும் படைகள்

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் டூ பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 8.86 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க 5 ஆயிரத்துக்கும் அதிகமான பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தையும், மேற்படிப்பில் அவர்கள் சேர விரும்பும் துறையையும் முடிவு செய்வதிலும் பிளஸ் டூ தேர்வு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மருத்துவம், பொறியியல், விவசாயம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புஎன்றாலும், கலை அறிவியல் படிப்பு என்றாலும் பிளஸ் டூ மதிப்பெண்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. எனவேதான் மாணவ, மாணவிகளைக் காட்டிலும் அவர்களின்பெற்றோர் பிளஸ் டூ தேர்வு மீது மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி விட்ட நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 2,382 தேர்வு மையங்களில் தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம்8.86 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். காலை 10 முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடக்கும். 10 மணிக்கு தேர்வு தொடங்கியதும், வினாத்தாளை படித்துப் பார்ப்பதற்கு 10 நிமிடமும், அதன்பிறகு விடைத்தாளில் தேவையான விவரங்களை குறிப்பிடுவதற்கு 5 நிமிடமும் அளிக்கப்படும். 10.15 மணிக்கு தேர்வு தொடங்கும். முதல் நாளான இன்று, தமிழ் முதல் தாள் தேர்வு நடக்கிறது. மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கவும்,முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவும் மூத்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகள் தலைமையில் 5 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கல்வித் துறையினர் தவிர மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட் சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை யினரும் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வர். தேர்வெழுதும் மாணவர்களின் வசதிக்காகதேர்வறைகள் காற்றோட்ட மானதாக இருக்கவும், அங்கு குடிநீர், எதிர்பாராமல் மின்வெட்டு ஏற்பட்டால் அதைச் சமாளிக்க ஜெனரேட்டர் உள்ளிட்ட வசதிகள் செய்துதரவும் பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவுரை வழங்கியுள்ளது. பிளஸ் டூ தேர்வு 31-ம் தேதி முடிவடைகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி முடிவடைகிறது.

அரசு தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிளஸ் டூ மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பாக பொதுமக்கள், மாணவர்கள் தங்களின் புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசு தேர்வு இயக்ககத்தில் முழு நேர தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தக் கட்டுப்பாட்டு அறை செயல்படும். மாணவர்களும் பொதுமக்களும் தங்கள் புகார்கள்மற்றும் கருத்துகளை 8012594101, 8012594116, 8012594120, 8012594125 ஆகிய செல்போன் எண்களில் தெரிவித்து பயன்பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக