உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆணழகன் போட்டி, அழகிப் போட்டி நடத்தத் தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த லட்சிமி சுரேஷ் உயர் நீதிமன்றத்தில் அண்மையில் தொடர்ந்த வழக்கு விவரம்:
தனியார் பல்கலைக்கழகத்தில் பி.இ. படிக்கும் எனது மகள், அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற "டெகோஃபெஸ்' கலாசார விழாவில் நடத்தப்பட்ட அழகுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.
ஆனால், விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்தப்படி அவருக்குப் பரிசுகள் எதுவும் தரவில்லை. பங்கேற்புச் சான்றிதழ் மட்டும் கொடுத்தனர். அதுவும் போலி எனத் தெரியவந்துள்ளது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். எனவே, உரிய நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு நிர்வகிக்கும் கல்லூரி கலாசார நிகழ்ச்சியில் சிறந்த ஆணழகன் அல்லது அழகி யார் எனத் தேர்ந்தெடுப்பது தேவையானதா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
கலாசார நிகழ்ச்சிகள் மாணவர்களின் திறமையை வெளிக் கொணர்வதாக இருக்க வேண்டும். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு, இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தடுப்பதற்கு இடைக்கால உத்தரவு வழங்க இந்த நீதிமன்றம் கருதுகிறது.
மேலும், பல்கலைக்கழகங்கள் இது போன்ற நிகழ்ச்சிகளைக் கவனிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் எதாவது வழிமுறைகள் வழங்கியுள்ளதா, பல்கலைக்கழகத்தின் எந்த அதிகாரி இவற்றைக் கண்காணிக்கிறார், நிதி எவ்வாறு கையாளப்படுகிறது என்பன உள்பட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்ய நீதிமன்றம் விரும்புகிறது. அதுவரை, இது போன்ற அழகன், அழகிப் போட்டிகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும் அல்லது இது போன்ற போட்டிகள் நடத்தக் கூடாது என அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கு தமிழக உயர் கல்வித் துறை செயலர், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஆகியோர் உடனடியாகச் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
மேலும், இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில், அனைத்து கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம், கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் ஆகியவை சுற்றறிக்கை அனுப்பியுள்ளன. அதில், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டியது கட்டாயம்.
எனவே, கல்லூரி வளாகம், பல்கலைக்கழக வளாகங்களில் ஆணழகன், அழகிப் போட்டி நடத்தத் தடை விதிக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக