அம்மா உப்பு' குறித்த படப்பிடிப்பை, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நடத்திட, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன், அனுமதி வழங்கி உள்ளார்.
ரேஷன் கடை விலை:
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா, வாலிநோக்கம் என்ற இடத்தில், 2,000 ஏக்கரில், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் ஆலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உப்பு, தொழிற்சாலை, பொது வினியோக திட்டம் போன்றவற்றுக்கு சப்ளை செய்யப்படுகிறது. கடந்த, 1997ம் ஆண்டு முதல், ரேஷன் கடைகளில், உப்பு விற்பனை செய்யப்படுகிறது. ரேஷன் கடைகளில், அயோடின் கலந்த உப்பு, கிலோ, 3.50 ரூபாய், அயோடின் கலந்த சுத்திகரிப்பு செய்யப்பட்ட தூள் உப்பு, ஆறு ரூபாய் என, விற்பனை செய்யப்படுகிறது.
விற்பனை 'டல்':
உப்பு உற்பத்தியில், பல தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதனால், நடுத்தர மற்றும் உயர் வருவாய் பிரிவினர், ரேஷன் கடைகளில், உப்பு வாங்குவதில்லை. இதற்கு தீர்வு காண, தமிழ்நாடு உப்பு நிறுவனம், வெளிச்சந்தையில், 'அம்மா உப்பு' என்ற பெயரில், அதிக சத்து கொண்ட உப்பை, விற்பனை செய்து வருகிறது. எனினும், விற்பனை, பெரிய அளவிற்கு நடக்கவில்லை. எனவே, 'அம்மா உப்பு' குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு செய்ய, தமிழ்நாடு திரைப்படப்பிரிவு சார்பில், 'அம்மா உப்பு' குறித்த வீடியோ செய்தி மலர் தயாரிக்கப்பட உள்ளது.
பள்ளிகளில் படப்பிடிப்பு:
இதற்கான படப்பிடிப்பை, பள்ளிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளில், படப்பிடிப்பு நடத்த, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுமதி வழங்கி உள்ளார். இது தொடர்பாக, அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும், இயக்குனர், சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகம், வகுப்பறை மற்றும் விளையாட்டுத் திடல்களில், 'அம்மா உப்பு' குறித்த படப்பிடிப்பு நடத்த, திரைப்படத்துறையினர் அனுமதி கோரினால், அனுமதி அளிக்க வேண்டும்.
* படப்பிடிப்பு குழுவினர், பள்ளி தலைமையாசிரியர்களை அணுகினால், அனுமதி மற்றும் உரிய ஒத்துழைப்பை அளிக்க, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், சுற்றறிக்கை அனுப்ப, அந்தந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக