லேபிள்கள்

6.6.15

பூட்டுப் போட்டார் ஒரு சி.இ.ஓ., உடைத்தார் மற்றொரு சி.இ.ஓ.,

குமரி மாவட்ட சி.இ.ஓ., அலுவலகத்துக்கு ஒரு சி.இ.ஓ., பூட்டு போட்டார். சிறிது நேரத்தில் மற்றொரு சி.இ.ஓ. தாசில்தார் முன்னிலையில் பூட்டை உடைத்தார்.
குமரி மாவட்ட சி.இ.ஓ. ராதாகிருஷ்ணன். இவர் அண்மையில் பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய சி.இ.ஓ.வாக விருதுநகர் சி.இ.ஓ.ஜெயக்குமார் நியமிக்கப்பட்டு, நேற்று முன்தினம் காலை பதவி ஏற்றார்.

இந்நிலையில் அரசின் உத்தரவுக்கு எதிராக ராதாகிருஷ்ணன் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னை சில குற்றச்சாட்டுகளின் பேரில் பழி வாங்குவதாகவும், கல்வித்துறை செயலாளர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதால் இணை இயக்குனருக்கான பதவி உயர்வு பட்டியில் இரண்டாவது இடத்தில் இருந்தும் தனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.

இதன் மீது தீர்ப்பளித்த நீதிபதி வைத்தியநாதன், ராதாகிருஷ்ணன் குமரி மாவட்ட சி.இ.ஓ. வாக உள்ள நிலை அப்படியே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டார். நேற்று முன்தினம் மாலையில் இந்த தீர்ப்பு வெளியானது. தீர்ப்பு நகலை பெற்ற ராதாகிருஷ்ணன் நேற்று காலை நாகர்கோவிலில் சி.இ.ஓ. அலுவலகத்துக்கு வந்து தனது அறைக்கதவுக்கு வேறு ஒரு பூட்டு போட்டு விட்டு தக்கலையில் பள்ளிகளில் ஆய்வு நடத்த சென்றார்.

 இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.பின்னர் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் வாசுகி முன்னிலையில் பூட்டு உடைக்கப்பட்டது. அங்கு அரசு தற்போது நியமித்துள்ள ஜெயக்குமார் அமர்ந்து பணிகளை மேற்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக