லேபிள்கள்

13.12.15

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் நாளை திறப்பு

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளி-கல்லூரிகள் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன. 


வெள்ளம் சூழ்ந்த வகுப்பறைகள், வளாகங்கள் சுத்தப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

கொட்டித்தீர்த்த பருவமழை:

தமிழகத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில், கடந்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி (செவ்வாய்கிழமை) தீபாவளி பண்டிகை வந்தது. இதற்காக, சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளி - கல்லூரிகள் நவம்பர் மாதம் 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 11-ந் தேதி (புதன்கிழமை) வரை விடுமுறை அறிவித்திருந்தன. 

12-ந் தேதி பள்ளி - கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அன்றைய தினம் பெய்த கனமழையால் இந்த 3 மாவட்டங்களிலும் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மழை தொடர்ந்ததால், ஒவ்வொரு நாளாக விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இப்படியே 25-ந் தேதி (புதன்கிழமை) வரை விடுமுறை தொடர்ந்தது. அதாவது, தீபாவளி பண்டிகை முதல் கார்த்திகை தீபம் வரை 18 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. 

இடையில் 3 நாட்கள் நடந்தது:

நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த மாதம் 26-ந் தேதி (வியாழக்கிழமை) சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டன. அன்றைய தினமும், 27, 28-ந் தேதிகளிலும் பள்ளி-கல்லூரிகளில் வகுப்புகள் நடந்தன. 

ஆனால், மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியதால், 29-ந் தேதியில் இருந்து ஒவ்வொரு நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வந்தது. இம்மாதம் 1-ந் தேதி (செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் மறுநாள் (2-ந் தேதி) நள்ளிரவு வரை கொட்டித்தீர்த்த வரலாறு காணாத தொடர் மழையால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏரிகளில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 

கால அவகாசம்:

இந்த அசாதாரண சூழ்நிலையில், பள்ளி - கல்லூரிகளின் விடுமுறை மேலும் நீட்டிக்கப்பட்டது. 3, 4-ந் தேதிகள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, மழை குறைந்தாலும், வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் மீள முடியாத நிலை நீடித்தது. 

இப்படியே, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை நாளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. இந்த நிலையில், கடந்த 9-ந் தேதி, தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதாவது, பள்ளி - கல்லூரி வளாகங்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்றவும், வகுப்பறைகளை சுத்தப்படுத்தவும் கால அவகாசம் அளித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை விடுமுறையை நீட்டித்தது. 

33 நாட்கள் விடுமுறை:

இவ்வாறு, 2-வது கட்ட விடுமுறையும் 15 நாட்கள் தொடர்ந்தது. மொத்தமாக கணக்கில் எடுத்துக்கொண்டால், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 33 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த 3 மாவட்டங்களிலும் பள்ளி - கல்லூரிகள் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்பட இருக்கிறது. 

கல்வி நிறுவன வளாகங்களில் தேங்கிய மழைநீர் முற்றிலும் அகற்றப்பட்டதுடன், வகுப்பறைகளும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு தொற்றுநோய் பாதிக்காத வகையில், பள்ளி - கல்லூரி வளாகத்தில் ‘பிளீச்சிங்’ பவுடர்கள் தூவப்பட்டுள்ளன. கொசு மருந்தும் அடிக்கப்பட்டு வருகிறது. 

மாணவர்கள் எதிர்பார்ப்பு ;

கடும் சோதனைகளுக்கு பிறகு நாளை (திங்கட்கிழமை) பள்ளி வரும் மாணவர்கள் நிறைய எதிர்பார்ப்புடன் வருகின்றனர். அதாவது, மழை வெள்ளத்தில் நிறைய மாணவர்களின் புத்தகங்கள், சீருடைகள் அடித்து செல்லப்பட்டுவிட்டன. 

,அதனால், வெள்ள பாதிப்பு அதிகம் இருந்த இடங்களில் உள்ள பள்ளிகளில், ‘சீருடை கட்டாயம் இல்லை’ என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

மேலும், 2-ம் பருவத்திற்கான புத்தகங்களையும் அரசு மீண்டும் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக