அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களைப் பயிற்சிக்கு அனுப்புவதற்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மழை- வெள்ள பாதிப்பால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு ஒரு மாதத்துக்கு மேல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், 22 நாள்கள் வேலை இழப்பு ஏற்பட்டது. பள்ளிகள் கடந்த திங்கள்கிழமையன்றுதான் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
விடுமுறையை ஈடுசெய்வதற்காக சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், முதல் சனிக்கிழமை (டிச.19) வேலை செய்வதற்கு முன்பே, அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் சார்பில் கற்றல், கற்பித்தல் பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தலைமை ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவர்கள் கூறியது:-
வகுப்புகளை சனிக்கிழமைகளில் நடத்துமாறு பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்துகிறது. ஆனால், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் அதே சனிக்கிழமையன்று பயிற்சிக்கு அழைக்கப்படுகின்றனர்.
ஆசிரியர்கள் முழு அளவில் இல்லாமல் சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்துவது கடினம். வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டுமாவது ஆசிரியர்களுக்கான இந்தப் பயிற்சிக்கு விலக்கு வழங்கியிருக்கலாம்.
எனவே, குறைந்தபட்சம் அடுத்த ஒரு மாதத்துக்காவது இத்தகைய பயிற்சிகளிலிருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் பயனடையும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகளை முழுமையாக நடத்த முடியும் என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக