லேபிள்கள்

3.7.16

கால்நடை மருத்துவம் 'ரேங்க்' பட்டியல் வெளியீடு : ஜூலை 13ல் கவுன்சிலிங் துவக்கம்

சென்னை: தமிழக கால்நடை மருத்துவக் கல்லுாரியில், இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கவுன்சிலிங் ஜூலை 13 முதல் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது.


இதுதொடர்பாக, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் எஸ்.திலகர் கூறியதாவது: 

கால்நடை அறிவியல் படிப்பில் இங்கு, 320 இடங்கள்; கோழியின வளர்ப்பு, பால்வளத் தொழில்நுட்பம் மற்றும் மீன்வள அறிவியல் படிப்புகளில், தலா, 20 இடங்களும் என, 380 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்வதற்காக, 16 ஆயிரத்து 938 விண்ணப்பங்கள் வந்ததில், 16 ஆயிரத்து 168 பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களது மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.இதில், நாமக்கல்லைச் சேர்ந்த எஸ்.தீனேஷ்வர், 
திருச்சியைச் சேர்ந்த ஆர்.தட்சிணாமூர்த்தி என்ற இருவர், 199.75 கட் - ஆப் மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளனர். நாமக்கல், நந்தினி; தர்மபுரி, தினேஷ்குமார் ஆகியோர், 199.50 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.
ஜூலை 13 முதல் 15 வரை சென்னையில் கவுன்சிலிங் நடைபெறும். உரிய மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, கவுன்லிங்கிற்கான அழைப்புக் கடிதம், நாளை முதல் அனுப்பப்படும். கடிதம் கிடைக்காவிட்டாலும், தகுதி உடைய மாணவர்களும் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.


முதல் நாளில், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிளஸ் 2வில் தொழிற்பிரிவில் படித்தவர்கள்; 2வது நாளில், பொதுப்பிரிவு மற்றும் கால்நடை அறிவியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடைபெறும். கடைசி நாளில் இதர மூன்று படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டாப் 10 'ஜூட்' : நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., சேர்வதற்கு, 'நீட்' என்ற, தேசிய அளவிலான தகுதி தேர்வு நடத்தப்படும் என, மத்திய அரசு அறிவித்தது. மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டமான, சி.பி.எஸ்.இ., முறையில் படிக்காதவர்களுக்கு அது சிரமமாக இருக்கும் என்பதால் பெரும்பாலான மாணவ, மாணவியர், முன்னெச்சரிக்கையாக பொறியியல், கால்நடை மற்றும் வேளாண் படிப்புகளுக்கு மனு செய்திருந்தனர். சென்னையில் நேற்று வெளியிடப்பட்ட, கால்நடை படிப்புகளுக்கான, 'ரேங்க்' பட்டியலில், முதல், 10 இடம்பெற்ற நான்கு மாணவியர் உள்ளிட்ட, 10 பேரில், ஒன்பது பேர் சென்னை மருத்துவக் கல்லுாரியிலும், ஒரு பெண், ஸ்டான்லி கல்லுாரியிலும் ஏற்கனவே சேர்ந்துவிட்டனர்.'நீட்'டுக்கு பயந்து, கால்நடை படிப்பிற்கு மனு செய்திருந்ததாகவும், இந்த ஆண்டு, 'நீட்'டுக்கு விலக்கு அளிக்கப்பட்டதால் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்துவிட்டோம்' என அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக