புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த படிகள் தள்ளுபடியை கைவிட வேண்டும் உட்பட 36 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை 11ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்க உள்ளதாக அறிவித்தனர். இதற்கு பாதுகாப்பு, அஞ்சல், வருவாய், ரயில்வே உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு திரட்டி வந்தன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை போராட்டக் குழுவினர் சந்தித்தனர். அதன் பின்னர் வேலை நிறுத்தத்தை தள்ளி வைப்பதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
சூர்யபிரகாஷ் (செயல் பொதுச்செயலாளர், எஸ்ஆர்ஈஎஸ்): எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற உயர்மட்டக்குழு அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டது. அந்த குழு தரும் பரிந்துரைகளின் அடிப்படையில் 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் திருத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அதனை நிதி அமைச்சகமும் ஒப்புக்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதனால் வேலை நிறுத்தத்தை 4 மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளோம்.
அபிமன்னன் (கோட்டத் தலைவர், டிஆர்ஈயூ): எங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய உயர் மட்டக் குழு அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அந்தக்குழு 4 மாதத்தில் பரிந்துரைகளை மத்திய அரசிடம் வழங்கும். அவை எப்படி இருக்கும், அதனை மத்திய அரசு அமல்படுத்துமா என்பது 4 மாதத்திற்கு பிறகுதான் தெரியும். அதனால் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக