சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறையில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய அரசின் கட்டாயக் கல்வி சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் நியமனத்திற்கான தகுதித் தேர்வினை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும். ஆனால், தமிழக அரசு 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தாமல் இருப்பது கவலையளிப்பதாக இருக்கிறது. மத்திய அரசு உத்தரவின்படி 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் 3 வருடங்களுக்கு மேல் தகுதித் தேர்வை நடத்தாமல் இருப்பது வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் எண்ணற்ற இளைஞர்களின் வாழ்வை இருள் சூழ வைத்துள்ளது
குறிப்பாக அதிமுக ஆட்சியில் கடந்த 3 வருடங்களாக பட்டப் படிப்பு முடித்தவர்கள் இத்தேர்வை எழுத முடியாமல் தவிக்கிறார்கள். ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டு, 2016 வரை இந்த தகுதி தேர்வை எழுத வழங்கப்பட்ட கால அவகாசமும் 1665 ஆசிரியர்களுக்கு நிறைவடையும் சூழ்நிலையில், மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது பற்றி எந்த வித அறிவிப்பையும் அதிமுக அரசு வெளியிடாமல் இருப்பது புரியாத புதிராக இருக்கிறது.
இதனால் ஆசிரியர் பணியில் புதிதாக சேர விரும்புவோரும், ஏற்கனவே ஆசிரியர் பணியில் சேர்ந்து இந்த தேர்வை எழுத முடியாத காரணத்தால் மருத்துவ விடுப்பு, ஊக்கத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகளை பெற முடியாதவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகியிருக்கிறார்கள். 3 வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வை உரிய காலத்தில் நடத்து வதற்கு ஏன் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஆசிரியர்கள் நலன் மற்றும் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களின் நலன் கருதி இனியா வது அதிமுக அரசு விழித்துக் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வை உடனடியாக நடத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக முறையிட்டு, இதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் அதிமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், பள்ளிக்கல்வித்துறையில் 60 மாவட்டக் கல்வி அலுவலர்கள், 15 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகர்கள், 100க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், அதே அளவிலான மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அத்துடன், ஆசிரியர்களுக்கான இடமாறுதால் தொடர்பான பொதுக் கலந்தாய்வும் ஜூலை மாதமாகியும் நடைபெறவில்லை. இவை அனைத்தும் கல்வித் துறையைப் பாழ்படுத்தி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் செயல்களாகும். இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உரிய நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக