லேபிள்கள்

9.7.16

654 தனியார் மருத்துவமனைகளில் அரசு ஊழியர்கள் சிகிச்சை பெறலாம்

அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 654 தனியார் மருத்துவமனைகளில் அரசு ஊழியர்கள் சிகிச்சை பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இதற்கான அரசு உத்தரவை நிதித் துறை செயலாளர் க.சண்முகம் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: எத்தனை பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டது, எத்தனை பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பன குறித்த விவரங்களை ஆண்டு அறிக்கையாகவோ அல்லது அரையாண்டு, காலாண்டு அறிக்கையாகவோ யுனைடெட் இந்தியா நிறுவனம் தாக்கல் செய்ய வேண்டும். சிகிச்சைகள் பெறுவது தொடர்பாக சந்தேகங்கள், விளக்கங்கள் பெற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணான 1800 233 5666-ஐ தொடர்பு கொள்ளலாம். 113 வகையான நோய்களுக்கு அறுவை சிகிச்சைகளையும், மருத்துவ வசதிகளையும் பெற வழி செய்யப்பட்டுள்ளது. இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரகம், இதய மாற்று அறுவை சிகிச்சை, இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை, தீக் காயங்கள் போன்றவற்றுக்கு ரூ.7.5 லட்சம் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. அரியலூர், சென்னை, கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகை ,நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்பட 32 மாவட்டங்களிலும், பெங்களூரு, திருவனந்தபுரம், புதுதில்லி, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் உள்ள புகழ்பெற்ற 654 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக