லேபிள்கள்

7.7.16

ஒரே நாளில் 2 பல்கலையில் கவுன்சிலிங் : தொழிற்கல்வி மாணவர்கள் குழப்பம்

வேளாண் பல்கலை அறிவித்த நாளிலேயே, கால்நடை பல்கலையும் கவுன்சிலிங் அறிவித்துள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.


அரசு பள்ளிகளில், பிளஸ் 2வில் தொழிற்கல்வியில் படித்த மாணவர்களுக்கு, தமிழக வேளாண் பல்கலையில் பி.எஸ்சி., படிப்புக்கும்; கால்நடை மருத்துவ பல்கலையில், பி.வி.எஸ்சி., படிப்பிற்கும், மாணவர் சேர்க்கையில், 5 சதவீத இடம் ஒதுக்கப்படுகிறது. இதன்படி, வேளாண் பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளில், 40 இடங்களும்; கால்நடை மருத்துவ பல்கலையில், 16 இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. வேளாண் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், கோவை வேளாண் பல்கலையில் நடந்து வருகிறது. ஜூலை, 13ம் தேதி, தொழிற்கல்வி மாணவர்களுக்கு கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவ பல்கலை, இரு தினங்களுக்கு முன், கவுன்சிலிங் தேதியை அறிவித்தது. அதில், 'ஜூலை, 13ம் தேதி கால்நடை மருத்துவ கவுன்சிலிங் துவங்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. 'துவக்க நாளிலேயே, தொழிற்கல்வி மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், தொழிற்கல்வி மாணவர்களில், இரு பல்கலைகளுக்கும் விண்ணப்பித்தவர்கள், எந்த கவுன்சிலிங்கில் பங்கேற்பது என குழப்பத்தில் உள்ளனர்.இதுகுறித்து தமிழ்நாடு வேளாண் பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் அக்ரி எம்.மாதவன் கூறியதாவது: தொழிற்கல்வி மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. மத்திய அரசும் தொழிற்கல்வியை முன்னிலைப்படுத்தும் நிலையில், உயர் படிப்புகளில் அவர்களுக்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்க வேண்டும். 

எனவே, கால்நடை மருத்துவ பல்கலையின் தொழிற்கல்வி கவுன்சிலிங் தேதியை, தாமதமின்றி மாற்றினால், தொழிற்கல்வி மாணவர்களுக்கு வாய்ப்பாக இருக்கும். இதுகுறித்து, அவர்களுக்கு கடிதமும் எழுதியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக