சென்னை: ஐந்தாண்டு பி.ஆர்க். (கட்டடவியல் பொறியியல்) சேர்க்கைக்கு ஆன்-லைனில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துறைகள், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான பி.ஆர்க். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
2016-17 கல்வியாண்டுக்கான பி.ஆர்க். சேர்க்கைக்கான அறிவிப்பை பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, புதுதில்லி கட்டடவியல் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் தேசிய கட்டடவியல் திறனறி தேர்வு 2016-இல் தகுதி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 4 கடைசித் தேதி என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெறும் 2 ஆயிரம் பேர் மட்டுமே சேர்க்கைக்காக ஆன்-லைனில் பதிவு செய்ததாக தெரிகிறது.
விண்ணப்பிப்போர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டதால், ஆன்-லைனில் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை ஜூலை 9-ஆம் தேதி வரை நீட்டித்து பல்கலைக்கழகம் இப்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆன்-லைனில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன் மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டு, தேசிய திறனறி தேர்வு மதிப்பெண் சான்றிதழ், அதற்கான தேர்வறை நுழைவுச் சீட்டு உள்ளிட்ட தேவையான சான்றிதழ்களின் நகல்களை சுயசான்றிட்டு அனுப்ப வேண்டும்.
அதனுடன் விண்ணப்பக் கட்டணத்துக்கான வரைவோலையையும் இணைத்து -செயலர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை, அண்ணா பல்கலை, சென்னை - 600 025- என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக