லேபிள்கள்

7.7.16

பள்ளி மாணவர்களுக்கு சுயமருத்துவம் செய்ய தடை

பள்ளிக்கு வரும் மாணவர்கள், காய்ச்சல், இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆசிரியர்கள் மருத்துவம் அளிக்கக் கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.
கோடைக்காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பருவ நிலை மாற்றத்தால், கொசு உற்பத்தியும், நோய்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில், திடீர் மழை மற்றும் அதனால் தேங்கும் நீரால், டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. 

இதற்கு முன்னெச்சரிக்கையாக, தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனரகம், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 

 பள்ளி வளாகத்தில், நீர் தேங்காமல் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்  குடிநீர் பானைகள், குடங்கள், பாத்திரங்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகளை கண்டிப்பாக மூடி வைக்க வேண்டும்; வகுப்பறை மற்றும் கழிப்பறைகளை சுற்றி, தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

  பள்ளி மாணவர்களிடம் கடுமையான காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களை உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் அல்லது அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் 

 எந்த சூழ்நிலையிலும், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மருத்துவம் செய்யக் கூடாது. அவர்களும் சுயமருத்துவம் செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும்

  டெங்கு, சிக்குன் குனியா நோய் அறிகுறிகள் மற்றும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக