2016-17ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில சாதனை எய்தும் வகையில் திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் உள்ள 3 கல்வி மாவட்டங்களில் தலா 100 பேர் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் மீத்திறன் மிக்க மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அரசு பொதுத் தேர்வில் சாதனை படைத்திட "டேன் எக்ஸல்' எனும் சிறப்பு பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் சார்பில் 2016-17ஆம் ஆண்டுக்கான சிறப்பு பயிற்சி திட்டத்தில், சனிக்கிழமை முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன. இதன்படி, திருநெல்வேலி, தென்காசி, சேரன்மகாதேவி கல்வி மாவட்டங்களில் தலா 100 பேர் வீதம் 300 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜூலை மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.
இதன் தொடக்கமாக திருநெல்வேலி கல்வி மாவட்டத்தில் கதீட்ரல் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி வகுப்பு சனிக்கிழமை தொடங்கியது. தென்காசியில் ஐசிஐ பள்ளியிலும், சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்துக்கு வள்ளியூர் நோபல் பள்ளியிலும் பயிற்சி வகுப்பு தொடங்கியது.
திருநெல்வேலியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்து முதன்மைக் கல்வி அலுவலரும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளருமான இரா. சுவாமிநாதன் பேசியது:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 3 கல்வி மாவட்டங்களிலும் 9ஆம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளியளவில் முதலிடம் பிடித்த மாணவர், மாணவிகள் தலா 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கும் தலா 2 ஆசிரியர்கள் வீதம் ஒவ்வொரு கல்வி மாவட்டத்துக்கும் தலா 10 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். பாடங்களில் உள்ள கடினமான பகுதிகளையும், பொதுத் தேர்வை எளிதில் எதிர்கொள்ளும் வகையிலும் பயிற்சி அளிக்கப்படும்.
இதன் மூலம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மாநில சாதனையை எய்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலர் ஜி. நிறைமதி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆவுடையப்ப குருக்கள், கல்வி மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், கதீட்ரல் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ஜான்சி, நரசிங்கநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் டைட்டஸ் ஜான் போஸ்கோ ஆகியோர் பயிற்சியின் நோக்கங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக