இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான, 'ரேண்டம்' எண் நேற்று வெளியிடப்பட்டது. மாணவர்களின், 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல், நாளை வெளியாகிறது.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கை நடக்கிறது. ஆன்லைன் : இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.68 லட்சம் பேர், ஆன்லைனில் பதிவு செய்தனர். அவர்களில், ஒரு லட்சத்து, 41 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில், தரவரிசையை முடிவு செய்வதற்கான, ரேண்டம் எண்ணை, உயர் கல்வி செயலர், சுனில் பாலிவால் நேற்று வெளியிட்டார். அதை, மாணவர் சேர்க்கைக்கான, www.tnea.ac.in இணையதளத்தில், தங்கள் பயன்பாட்டு குறியீடு எண்ணை பயன்படுத்தி, மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
நிர்ணயம் : இதை தொடர்ந்து, மாணவர்களின், கட் - ஆப் மதிப்பெண் அடிப்படையிலான, தரவரிசை பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது. அதன்படி, மாணவர்கள் தங்களுக்கு எந்த கல்லுாரியில் இடம் கிடைக்கும் என்பதை, ஓரளவு முடிவு செய்து கொள்ளலாம்.
முந்தைய ஆண்டுகளில், சில மாணவர்களுக்கு மட்டுமே, தரவரிசைக்காக ரேண்டம் எண் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர் இந்துமதி கூறுகையில், ''2011ல், 9; 2012ல், 16; 2013ல், 24; 2014ல், 124; 2015ல், 80 மற்றும் 2016ல், 27 பேருக்கு, ரேண்டம் எண்ணை பயன்படுத்தி, தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
பயன் என்ன? : ரேண்டம் எண் என்பது ஒவ்வொரு மாணவருக்கும், 10 இலக்கத்தில், கணினி மூலம் உருவாக்கப்பட்டு உள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஒரே மாதிரியான, 'கட் -- ஆப்' மதிப்பெண் பெறும் போது, அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளித்து, இடம் ஒதுக்கப்படும் என்பதற்கு, சில விதிகள் பின்பற்றப்படுகின்றன
ஒரே, 'கட் - ஆப்' உடைய மாணவர்களின் கணித பாட மதிப்பெண்ணில், யார் அதிகம் பெற்றிருக்கிறாரோ, அவருக்கு முன்னுரிமை தரப்படும். அதிலும், ஒரே மதிப்பெண் என்றால், இயற்பியல் மதிப்பெண் பார்க்கப்படும்; அதிலும் ஒரே மதிப்பெண் என்றால், நான்காவது பாடமான உயிரியல், கணினி அறிவியல் போன்ற பாடங்களின் மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படும்
அவற்றிலும், ஒரே மதிப்பெண் என்றால், மாணவர்களின் பிறந்த தேதியில், யார் மூத்தவரோ அவருக்கு முன்னுரிமை தரப்படும். அதிலும், ஒரே மாதிரி இருந்தால், ரேண்டம் எண்களில் முன்னணியில், அதிக மதிப்புள்ள எண் உள்ளவருக்கு, முன்னுரிமை தரப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக