லேபிள்கள்

24.6.17

'அட்மிஷன்' எப்படி: சி.பி.எஸ்.இ., விளக்கம்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, எப்படி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. 
சி.பி.எஸ்.இ.,யின், 'நீட்' தேர்வு பொறுப்பு இணை செயலர், சன்யம் பரத்வாஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

* 'நீட்' தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண்கள், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. தகுதி பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட கவுன்சிலிங் கமிட்டியை தொடர்பு கொண்டு, மாணவர் சேர்க்கை நடவடிக்கையை துவங்க வேண்டும்
* 'நீட்' தேர்வில், முன்னேறிய வகுப்பினருக்கு, 131; முன்னேறிய மாற்று திறனாளிகளுக்கு, 118 மற்றும் மற்றவர்களுக்கு, 107 மதிப்பெண், தேர்ச்சியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், digilocker.gov.in என்ற இணையதளத்தில், தங்களின் தரவரிசை கடிதங்களை பதிவிறக்கம் செய்யலாம்.


* அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 15 சதவீத மத்திய அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு, மத்திய அரசின் சுகாதார பணிகள் துறை, பொது இயக்குனரகம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படும். இதுகுறித்த, 'கட் - ஆப்' விபரங்களை, www.mcc.nic.in என்ற, இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்


* அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 'நீட்' தேர்வின் அகில இந்திய தரவரிசை பட்டியலின் அடிப்படையிலும், மாநில விதிகளின் படியும், அந்தந்த மாநிலங்களால், கவுன்சிலிங் நடத்தப்படும்.


* தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கு, மாநில கவுன்சிலிங் கமிட்டி சார்பில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பிளஸ் 2 மதிப்பெண் உண்டா தமிழகத்தில், பல மாணவர்கள், 'நீட்' தேர்வில், 450 மதிப்பெண் வரை பெற்றுள்ளனர். தமிழகத்தில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 'நீட்' தேர்வு மதிப்பெண்படி மட்டுமே, மாணவர் சேர்க்கை நடக்குமா அல்லது பிளஸ் 2 மதிப்பெண்படி நடக்குமா என, குழப்பம் நீடிக்கிறது. பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில், 'நீட்' தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மாநில அளவில் தரவரிசை பட்டியல் தயாரித்து, சேர்க்கை நடத்தலாம் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின், பொதுச்செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ''தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு, மருத்துவ சேர்க்கையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், 'நீட்' தேர்வில், தேர்ச்சியை மட்டுமே கணக்கிட்டு, பிளஸ் 2 மதிப்பெண்ணில் அதிகம் பெற்றவருக்கு சேர்க்கை வழங்க வேண்டும்,'' என்றார்.

கல்வியாளர்கள் கூறுகையில், 'தமிழக பிளஸ் 2 தேர்வை விட, நீட் தேர்வு சிந்திக்கும் திறன் வாழ்ந்ததாக உள்ளது. எனவே, அதில் அதிக மதிப்பெண் எடுப்போருக்கு முக்கியத்துவம் தர வேண்டும். எனவே, 'நீட்' தேர்வு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு சமவாய்ப்பு வழங்கி, இரண்டிலும் அதிகம் பெற்றவர்களுக்கான தரவரிசை பட்டியல் தயாரித்து, சேர்க்கை நடத்தலாம்' என்றனர்.

உள் ஒதுக்கீடு அவசியம் : நீட் தேர்வில் பங்கேற்ற, தமிழக மாணவர்களின் மதிப்பெண்கள் 
குறைவாகவே உள்ளது. 1,000க்கும் மேல் மாணவர்கள் படித்த டாப் பள்ளிகளில் கூட, நீட் தேர்வில், 300 மதிப்பெண்களை தாண்டியவர்களின் எண்ணிக்கை, 15ஐ கூட எட்டவில்லை.
ஓராண்டு முழுவதும் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே, ஓரளவுக்கு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழக அரசு, மாணவர்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில், உள் ஒதுக்கீடு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த ஆண்டு அனைத்து 
மாணவர்களும், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துக்கு சென்றுவிடுவர். நீட் தேர்வில், கடந்த ஆண்டு 
118 ஆக இருந்த தேர்ச்சி, நடப்பாண்டில் 125 முதல் 150 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக