லேபிள்கள்

30.7.17

உறைவிட பள்ளிக்கு மாணவர்கள் 'குட்பை' மலை கிராமத்தில் கனவாகும் கல்வி

 உடுமலை அருகே, உண்டு - உறைவிட பள்ளியில் போதிய வசதி இல்லாததால், மலைவாழ் கிராம குழந்தைகள் படிப்பை கைவிட்டு, மீண்டும் தங்கள் குடியிருப்புக்கே திரும்பி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதியில் மலை கிராம குழந்தைகள் படிப்புக்காக, புங்கமுத்துார் ஊராட்சி கரட்டூரில் உண்டு- - உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. 
ஐந்தாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படும் இப்பள்ளியில், மலைகிராமங்களை சேர்ந்த, 35 குழந்தைகள் படிக்கின்றனர்.
பள்ளியில் ஒரு தலைமையாசிரியர் மற்றும் சமையலர் ஒருவர், ஆதிதிராவிட நலத்துறையால் நியமிக்கப்பட்டுள்ளனர். 
குழந்தைகளின் பாதுகாப்புக்கு, ஆசிரியர் பள்ளிகளிலேயே தங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், இப்பள்ளியில், ஆசிரியர் மற்றும் சமையலர் தங்குவதில்லை.
மலை கிராமத்திலிருந்து வந்த பராமரிப்பாளர் ஒருவர் மட்டுமே, அங்கு தங்குகிறார். பள்ளியில், மின்விசிறி, குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டும், மின் இணைப்பு இல்லாமல், காட்சிப்பொருளாகவே உள்ளன.
அரிசி மூட்டை அடுக்கிய அறைதான் குழந்தைகளுக்கு தங்குமிடமாக உள்ளது. இருளடைந்த அறையில், அடுப்புக்கரியின் புகைக்கு நடுவில் பரிதாப நிலையில் குழந்தைகள் உறங்குகின்றனர். அடிப்படை வசதிகளை மேம்படுத்த, பெற்றோர் பல முறை வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் இல்லை.
பிஞ்சு குழந்தைகள் பற்றாக்குறையாக பசியாறுவதையும், முறையான கல்வி கிடைக்காத வேதனையோடும், 30 குழந்தைகளை, பெற்றோர் மீண்டும் தங்கள் மலை கிராமத்துக்கு அழைத்து சென்றுவிட்டனர்.
பெற்றோர் தரப்பில் கூறியதாவது:
ஆசிரியர், பள்ளியில் தங்குவதில்லை. பாதி நாட்கள் கூட பள்ளிக்கு வருவதில்லை. உணவு வழங்குவதிலும் முறைகேடு நடக்கிறது. இதுகுறித்து கேட்டால், அலட்சியமாக பதிலளிக்கின்றனர். 
உணவும், கல்வியும் கிடைக்காமல், பெயரளவில், எங்கள் குழந்தைகள் இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகளிடமும் பலமுறை புகார் தெரிவித்திருக்கிறோம், எதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், குழந்தைகளை அழைத்து செல்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக