லேபிள்கள்

1.8.17

மருத்துவ படிப்புக்கான கட்டண நிர்ணய குழுவை 2 வாரத்துக்குள் அமைக்க வேண்டும் யு.ஜி.சி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவு

நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நடத்தும் மருத்துவ படிப்புக்கான கட்டணத்தை நிர்ணயிக்க ஒரு குழுவை 2 வாரத்துக்குள் அமைக்க
வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், வி.பி.ஆர்.மேனன், ஜவஹர்லால் சண்முகம் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்துள்ள பொதுநல மனுக்களில், ‘தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மருத்துவ கல்லூரிகளை நடத்துகின்றன. இந்த கல்லூரிகளில் நடத்தப்படும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் மருத்துவ முதுகலை படிப்பில் சேரும் மாணவர்களிடம் ரூ.18 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை அதிக கட்டணமாக வசூலிக்கின்றனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கும்போது, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நடத்தும் மருத்துவ படிப்புக்கும் கட்டணத்தை நிர்ணயம் செய்யவேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு (யு.ஜி.சி.) உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் எம்.வேல்முருகன், ‘நீட் மருத்துவ நுழைவு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்திருந்தாலும், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நடத்தும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்பில் சேரவேண்டும் என்றால் பல லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தவேண்டும்.

இதனால், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் பணக்கார மாணவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘மருத்துவ படிப்புக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யும் குழுவின் உறுப்பினர்களாக, டெல்லி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற டாக்டர் சஞ்சய் ஸ்ரீவத்சவா மற்றும் டாக்டர் சீனிவாசன் ஆகியோரை நியமிக்க மத்திய குடும்பநல மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இவ்வாறு அமைக்கப்படும் குழு நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நடத்தும் மருத்துவ படிப்புக்கும் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கவேண்டும். எனவே, மருத்துவ கல்வி கட்டண நிர்ணய குழுவை, பல்கலைக்கழக மானியக்குழு 2 வாரத்துக்குள் அமைக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற 18–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக