லேபிள்கள்

1.8.17

‘நீட்’ தேர்வு விவகாரம்: தமிழக கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக மந்திரிகள் உறுதி தமிழக அரசு தகவல்

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தமிழக கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக மத்திய மந்திரிகள் உறுதியளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வரும் வகையில் ‘நீட்’ (தேசிய தகுதி நுழைவுத்தேர்வு) தேர்வு முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தமிழகத்தில் மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அனு மதியோடு 5 அமைச்சர்கள் கொண்ட குழு கடந்த மாதம் 20-ந்தேதி புதுடெல்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக 24-ந்தேதியன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்கள் குழுவினர், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆகியோரை சந்தித்தனர்.

25-ந்தேதியன்று புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தமிழக மாணவர்களின் நலன் கருதி, ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கான இணை மந்திரி (தனி பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோரை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்களிப்பது தொடர்பாக இறுதிக்கட்ட அழுத்தம் கொடுக்கும் வகையில் நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.

அப்போது சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார். இந்த சந்திப்பின்போது மத்திய மந்திரிகள் தமிழகத்தின் கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக