லேபிள்கள்

2.8.17

பிளஸ் 1 பொது தேர்வில் சட்ட சிக்கல் : பெற்றோர், ஆசிரியர்கள் தவிப்பு

'பிளஸ் 1 பொதுத் தேர்வு குறித்த வழக்கை விரைந்து முடிக்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெற்றோரும், ஆசிரியர்களும் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில், பல ஆண்டு களாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும், பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த மதிப்பெண் அடிப்படையில், உயர் கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் இருப்பதால், பெரும்பாலான பள்ளிகள், பிளஸ் 1 மாணவர்களுக்கும், பிளஸ் 2 பாடங்களே நடத்தி வந்தன.
உயர் கல்விக்கான, மத்திய அரசின் பல்வேறு நுழைவுத் தேர்வுகளில், பிளஸ் 1 பாடங்கள் அதிகளவில் இடம் பெற்றன. அதனால், தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாமல் தவித்தனர். இதையடுத்து, 'பிளஸ் 1 மாணவர்களுக்கும், இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து, மதுரை உயர் நீதிமன்றத்தில், பெற்றோர் சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 
அதில், 'ஏற்கனவே, 10ம் வகுப்பு; பிளஸ் 2வில், பொதுத் தேர்வு உள்ளது.பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு வந்தால், மாணவர்களுக்கு, மன அழுத்தம் ஏற்படும்' என, கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித் துறை, இன்னும் சரியான முடிவு எடுக்காமல் திணறுகிறது. அதனால், வழக்கு விசாரணை, ஆக., 7க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.இதனிடையே, வழக்கின் முடிவு எப்படி வரும் என்ற எதிர்பார்ப்பில், மீண்டும் பல பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில் பாடம் நடத்துவதில் ஆர்வம் குறைந்துள்ளது. தேர்வுக்கான விதிமுறைகள் வெளியிடப்படாததால், பிளஸ் 1 தேர்வு குறித்து, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர். 

இது குறித்து, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கூறுகையில், 'பள்ளிக்கல்வி அதிகாரிகள், உரிய முறையில் விளக்கம் கொடுத்து, சட்ட ரீதியான பிரச்னையை விரைந்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், 'நீட்' தேர்வு பிரச்னை போல், கடைசி வரை மாணவர்களை காத்திருக்க வைப்பது, இறுதியில் சிக்கலாகி விடும்' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக