லேபிள்கள்

28.6.18

'டல்' மாணவர்களை வெளியேற்றும் தனியார் பள்ளிகள் : அரசு பள்ளிகளில் அடைக்கலம்

குறைந்த மதிப்பெண் எடுப்பதால், தனியார் பள்ளிகளில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்படும் மாணவர்கள், அரசு பள்ளிகளில் இடம் கேட்டு, தஞ்சம் அடைந்துள்ளனர்.'பொது தேர்வில் அதிக மதிப்பெண்; 100 சதவீத தேர்ச்சி' என, தனியார் பள்ளிகள் இடையே கடும் போட்டி
நிலவுகிறது. இந்த போட்டியால், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை, தங்கள் பள்ளிகளில் இருந்து, கட்டாயமாக வெளியேற்றி, கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே, 100 சதவீத தேர்ச்சியை, தனியார் பள்ளிகள் உறுதி செய்கின்றன.குறிப்பாக, எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு முடித்த மாணவர்கள், மாற்று சான்றிதழை கொடுத்து, வெளியேற்றப்படுகின்றனர். இந்த ஆண்டில், பிளஸ் 1 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களையும், பள்ளிகள் வெளியேற்றி வருகின்றன. கட்டாய வெளியேற்றம், இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது.மாநிலம் முழுவதும், ஏராளமான மெட்ரிக் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், நுாற்றுக்கணக்கான மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களை, மற்ற தனியார் பள்ளிகளும் சேர்த்து கொள்ளாததால், அரசு பள்ளிகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.இந்த மாணவர்கள், அரசு பள்ளிகளில், அடிப்படை கட்டமைப்பு மற்றும் தேர்ச்சி விகிதம் அதிகம் உள்ள பள்ளிகளில் சேர, போட்டிபோடுகின்றனர். அரசு பள்ளிகளில் காலியிடங்கள் இருந்தால், தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களை, எந்த பிரச்னையும் இன்றி சேர்த்து கொள்ள வேண்டும். ஆங்கில வழியில் இடம் இல்லா விட்டால், தமிழ் வழியில் அவர்களை சேர்த்து, பிளஸ் 2 வரை படித்து முடிக்க, ஏற்பாடு செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கறுப்பு பட்டியல் தயாரிப்பு : தனியார் பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம், எந்த பள்ளியில் இருந்து வெளியேற்றப் பட்டனர் என்பதை கடிதமாக பெற, ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இந்த கடிதங்களை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சேகரித்து, பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில், கறுப்பு பட்டியலாக தாக்கல் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெறும் பள்ளிகள் மீது, மெட்ரிக் இயக்குனரகமும், தேர்வுத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 'மாணவர்கள் யாராவது கட்டாயமாக வெளியேற்றப்பட்டால், அதுகுறித்து, முதன்மை கல்வி அதிகாரி, பள்ளிக்கல்வி இயக்குனர், இணை இயக்குனர்கள் ஆகியோரிடம், எழுத்துப்பூர்வமாக பெற்றோர் புகார் அளித்தால், அந்த பள்ளிகள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் அதிகாரிகள் கூறிஉள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக