லேபிள்கள்

26.6.18

பாடம் நடத்தும் போதே 'நீட்' தேர்வுக்கு பயிற்சி: அரசு பள்ளிகளில் புதிய திட்டம்

பள்ளிகளில் பாடம் நடத்தும் போதே, 'நீட்' தேர்வுக்கான பயிற்சி வினாக்களுக்கு, மாணவர்களை தயார்படுத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.பிளஸ் 2 முடிக்கும்
மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வு கட்டாயமானதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, பயிற்சி முறையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.வெறும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், இதுவரை மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள், திடீரென, பிளஸ் 2 அல்லாத, நீட் நுழைவு தேர்வு வினாக்களை சந்திக்கவும், சிறப்பு பயிற்சி பெற வேண்டியுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 2017-18ல்,தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக, நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக அரசின் இலவச பயிற்சி பெற்ற, 1,300 மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இவர்களில், 20 பேர் மட்டுமே, மருத்துவ படிப்புகளில் சேரும் நிலை உள்ளது.இந்த ஆண்டு, மருத்துவ படிப்பில் சேரும், அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, நீட் சிறப்பு பயிற்சி மட்டுமின்றி, கல்வி ஆண்டு துவக்கம் முதலே, வகுப்புகளில் இருந்தே, மாணவர்களை தயார்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடம் நடத்தும் போதே, இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில், நீட் தேர்வுக்கான பழைய வினாக்கள் இடம் பெற்று இருந்தால், அது பற்றி சிறப்பு கவனம் எடுத்து, மாணவர்களுக்கு விளக்கம் தர வேண்டும்.
நீட் தேர்வு வினா வங்கியை பயன்படுத்தியும், அதிலுள்ள, எம்.சி.க்யு., என்ற, பல்வகை விடைக்குறிப்பு அடங்கிய வினாக்களின் மாதிரியை பயன்படுத்தியும், பள்ளியின் மாதிரி தேர்வுகளில் வினாக்களை இடம் பெற செய்ய வேண்டும் என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நடைமுறையை, தனியார் பள்ளிகள் ஏற்கனவே பின்பற்றுகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக