லேபிள்கள்

24.6.18

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பெரும் சரிவு

'அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில்,விண்ணப்ப வினியோகப்பணி தாமதமாக துவங்கியதால் நடப்பாண்டிலும், 40 சதவீத இடங்கள் நிரம்ப வாய்ப்பில்லை' என, முதல்வர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

ரூ.2,000 கட்டணம் : மாநிலத்தில், 46 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. இதில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவை முக்கிய துறைகளாக உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். அரசு கல்லுாரிகளில் ஆண்டுக்கு, 2000 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலவச லேப்டாப், பாடபுத்தகங்கள், பஸ் பாஸ் உள்ளிட்ட சலுகைகள் மற்றும் ஆண்டுக்கு, 8,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருவதற்கு, 10 நாட்களுக்கு முன்பிருந்தே, விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி, 10 நாட்களுக்கு பிறகே விண்ணப்ப பணி துவக்கப்படுகிறது.நடப்பு கல்வியாண்டிற்கான கலந்தாய்வு, இதுவரை துவங்கவில்லை. கல்லுாரிகளிலுள்ள இடங்களை காட்டிலும், குறைவான விண்ணப்பங்களே பெரும்பாலான கல்லுாரிகளில் பெறப்பட்டுள்ளன.இதனால், இந்தாண்டு, 40 சதவீத இடங்கள் நிரம்ப வாய்ப்பில்லை.
கலந்தாய்வு : கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறியதாவது:ஊட்டி கல்லுாரியில், 520 இடங்களுக்கு, 400 விண்ணப்பங்களும், கோவையில், 380 இடங்களுக்கு, 340 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. இந்நிலைதான், 95 சதவீத கல்லுாரிகளில் ஏற்பட்டு உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை இதை விட குறையும் என்பதால்,மாணவர்கள் சேர்க்கை மொத்தமாக சரிந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தொழில்நுட்ப கல்வி இயக்கக முதலாமாண்டு மாணவர் சேர்க்கை பொறுப்பாளர் லாவண்யா கூறுகையில், ''கடந்த இரண்டு ஆண்டுகளில், புதிதாக கல்லுாரிகள் துவக்கப்பட்டுள்ளன. இக்கல்லுாரிகளுக்கான அங்கீகாரம், ஏ.ஐ.சி.டி.இ., வழங்க தாமதம் ஆகியது. ''அக்கல்லுாரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை இருக்க வேண்டும் என்பதால், விண்ணப்ப வினியோக பணி தாமதம் ஆனது,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக