அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான தரவரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. அதேநேரத்தில், கவுன்சிலிங் துவங்கும் தேதி, ஜூலை முதல் வாரத்தில் இருந்து, வேறு நாளைக்கு
தள்ளி வைக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை நடத்தும், இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கு, அவர்களின் மதிப்பெண் மற்றும் இனம் வாரியான இட ஒதுக்கீடு அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, அண்ணா பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டு, உயர்கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் அளித்த பேட்டி:* இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு, ஒரு லட்சத்து, 59 ஆயிரத்து, 631 பேர், ஆன்லைனில் விண்ணப்பித்தனர். ஒரு லட்சத்து, ஒன்பதாயிரத்து, 850 பேர் மட்டும், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர். அவர்களிலும், 5,397 பேரின் விண்ணப்பங்கள் சில காரணங்களால், தகுதி பெறவில்லை. எனவே, ஒரு லட்சத்து, நான்காயிரத்து, 453 பேருக்கு மட்டுமே, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது* தரவரிசை பட்டியலில், பெயர் இடம் பெற்றதில், ஏதாவது தவறுகள் இருந்தால், அண்ணா பல்கலைக்கு மாணவர்கள் தெரிவிக்கலாம். சான்றிதழ் சரிபார்ப்பில், தகுதி பெறாதவர்களும், தங்களுக்கான சான்றிதழ் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, பட்டியலில் சேர்ந்து கொள்ளலாம். இதற்கு, 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது* தரவரிசை பட்டியலில், 10 பேர், 200க்கு, 200, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்று, 'டாப்பர்ஸ்' பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில், கோவையை சேர்ந்த கீர்த்தனா ரவி என்ற மாணவி, முதலிடம் பெற்றுள்ளார். இவர், பாலக்காட்டில் உள்ள, தனியார் பள்ளியில், கேரள பாடத்திட்டத்தில், பிளஸ் 2 படித்தவர்* ஜூலை முதல் வாரத்தில், கவுன்சிலிங்கை துவங்க திட்டமிட்டோம். ஆனால், மருத்துவ கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 10 வரை நடக்கிறது. அதன் பிறகே, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை நடத்த முடியும். 2017ல், மருத்துவ கவுன்சிலிங்குக்கு முன், இன்ஜி., கவுன்சிலிங் நடத்தியதால், இடங்கள் ஒதுக்கீடு பெற்ற, 400 மாணவர்கள், இன்ஜி., படிப்பை விட்டு, மருத்துவ படிப்புக்கு சென்று விட்டனர்* எனவே, இடங்கள் வீணாவதை தடுக்க, இந்த முறை மருத்துவ கவுன்சிலிங் முடிந்த பிறகே, இன்ஜி., கவுன்சிலிங் நடத்தப்படும். இதற்காக, ஜூலை, 31க்கு பிறகும், மாணவர் சேர்க்கையை நடத்த, உச்சநீதிமன்றத்தில் மனு செய்து, கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது* இந்த ஆண்டு, 509 கல்லுாரிகளுக்கு, கவுன்சிலிங் வாயிலாக, இன்ஜி., மாணவர் சேர்க்கை நடக்கிறது. 26 கல்லுாரிகள், 2017 - 18ல், மாணவர் சேர்க்கையை நடத்தினாலும், இந்த ஆண்டு, மாணவர் சேர்க்கையை நிறுத்தி விட்டன* மொத்தம், ஒரு லட்சத்து, 76 ஆயிரத்து, 865 இடங்களுக்கு, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்கிறது. சில கல்லுாரிகள், தங்களின் நிர்வாக இடங்களை, கூடுதலாக அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கியுள்ளன. அதனால், 18 ஆயிரத்து, 771 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.பட்டியல் வெளியீட்டின் போது, அண்ணா பல்கலை துணைவேந்தர், சுரப்பா, உயர்கல்வி செயலர், சுனில்பாலிவால், தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்கக கமிஷனர், விவேகானந்தன், தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி செயலர், ரைமண்ட் உத்தரியராஜ், பொது மாணவர் சேர்க்கை செயலர், நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.அதிக கட்டணம் வசூலித்தால்நடவடிக்கை
அமைச்சர் அன்பழகன் கூறியதாவது:இன்ஜி., கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 55 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 87 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர்கல்விக்கான கட்டண கமிட்டி, விரைவில் புதிதாக நியமிக்கப்படும். இன்ஜினியரிங் கல்லுாரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக இதுவரை புகார்கள் வரவில்லை. யாராவது புகார் அளித்தால் உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும்.அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலானஏ.ஐ.சி.டி.இ.,யின் புதிய விதியால், தமிழகத்தில் பேராசிரியர்கள் வேலைக்கு பிரச்னை இல்லை. பேராசிரியர்களை, எந்த கல்லுாரியாவது கட்டாயமாக வெளியேற்றினால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக