லேபிள்கள்

12.5.13



பிளஸ்-1 வகுப்பில் பிளஸ்-2  பாடத்தை நடத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து.- பள்ளிக்கல்வி அமைச்சர் எச்சரிக்கை

பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடங்களை நடத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும் என்று சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் எச்சரிக்கை விடுத்தார்.

சட்டசபையில்  பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் உறுப்பினர்கள் ஆர்.சுபா (தே.மு.தி..), கே.பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ஆகியோர் பேசும்போது, ஆசிரியர் தகுதித்தேர்வில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதற்கு பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் பதில் அளித்துப் பேசும்போது கூறியதாவது:

தகுதித்தேர்வு மதிப்பெண் குறைக்கப்படுமா?
மத்திய அரசு கொண்டு வந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை தகுதித்தேர்வு மூலம்தான் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.தகுதியான, திறமையான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காகவே ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து பிரிவினருக்கும் ஒரே தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் என்று நிர்ணயித்திருப்பது அரசின் கொள்கை முடிவு ஆகும்இவ்வாறு அமைச்சர் வைகைச் செல்வன் கூறினார்.

பள்ளி அங்கீகாரம் ரத்து
விவாதத்தில் உறுப்பினர் பாலபாரதி பேசுகையில், பல தனியார் பள்ளிகளில் அதிக கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தை பணமாக இல்லாமல் வங்கிக்கணக்கு மூலம் செலுத்தும் நிலை இருந்தால் எவ்வளவு பணம் செலுத்தப்பட்டது? என்பதற்கு அது ஆதாரப்பூர்வமாக இருக்கும். பிளஸ்–2 தேர்வில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவமாணவிகளே ரேங்க் எடுக்கிறார்கள். காரணம் பல தனியார் பள்ளிகளில் பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடத்தை நடத்துகிறார்கள் என்று குறிப்பிட்டார்.அதற்கு பதில் அளித்த அமைச்சர் வைகைச் செல்வன், ‘‘ உறுப்பினர் கூறுவதைப் போல எந்த பள்ளியிலும் பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடம் நடத்தப்படவில்லை. அதுபோன்று பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடங்களை நடத்தினால் அந்த பள்ளியின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும். அதேபோல், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றன. சென்னையில் ஒருசில பள்ளிகளின் அங்கீகாரம் கூட நிரந்தரமாக ரத்துசெய்யப்பட்டு உள்ளது’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக