ஆசிரியர் பொது மாறுதல், ஆன்-லைன் பதிவு முறையில் மாற்றம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர் அனைவரும், நாளை(17ம் தேதி), மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்பதற்கு, ஆசிரியர் மத்தியில், எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த முறையால், ஒரே நாளில், 800க்கும் மேற்பட்ட ஆசிரியர், நீண்ட வரிசையில், காத்திருக்க நேரிடும் என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, 20ம் தேதி முதல், ஆன்-லைன் முறையில் நடக்கிறது. இதற்காக, கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர் அனைவரும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பள்ளி தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து பெற்று, அதனை, நாளை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும், நாளை காலை முதல், இணைய தளத்தில் பதிவு செய்யும் பணி நடக்கிறது. ஒரே நாளில், இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனால், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் என, அனைவரும், முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த முறையினால், மாவட்டந்தோறும், 800 முதல், 1,000த்திற்கும் அதிகமான ஆசிரியர்கள், கலந்தாய்வு விவரங்களை, இணைய தளத்தில் பதிவு செய்ய, நீண்ட நேரம், வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும் என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்குப் பதில், சம்பந்தபட்ட பள்ளிகளிலேயே, இணையதளத்தில், பதிவு செய்ய உத்தரவிடலாம் எனவும், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். இல்லை எனில், கலந்தாய்வு விவரங்களை, இணையத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை, மேலும் ஒருசில தினங்களுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதும், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் கூறியதாவது: வழக்கமாக, ஏப்ரல் மாதமே, விண்ணப்பங்களை பெறுவர். இந்த ஆண்டு, கடைசி நேரத்தில், "ஆன்-லைன்&' கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில், விவரங்களை பதிய வேண்டும் எனில், மணிக்கணக்கில், ஆசிரியர், சி.இ.ஓ., அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அனைத்துப் பள்ளிகளிலும், இணையதள வசதி உள்ளது. ஆசிரியர், அந்தந்த பள்ளிகளிலேயே, பதிய நடவடிக்கை எடுத்தால், நன்றாக இருக்கும்.இவ்வாறு பேட்ரிக் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக