இலவச திட்டங்களுக்கு வசூல்: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் - நாளிதழ் செய்தி
அரசின் இலவச திட்டங்களுக்கு, மாணவர்களிடம் பணம் வசூலித்த தலைமை ஆசிரியரை, தற்காலிக பணி நீக்கம் செய்து கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் அடுத்த சாமியார்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருபவர் மணிவண்ணன். இவர், அரசு விதிகளை மீறி, பள்ளியில் சேர வரும் மாணவர்களிடம், நன்கொடை என்ற பெயரில், எவ்வித ரசீதும் இன்றி, கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச பாட புத்தகம், சைக்கிள்,லோப்டாப் உள்ளிட்ட, இலவச பொருட்களை வழங்க, ஒவ்வொரு பொருளுக்கும், குறிப்பிட்ட தொகை வசூலிப்பதாக மாணவர்கள் புகார் கூறினர். கடந்த பிப்ரவரி மாதம், 6 முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அரசு இலவசமாக வழங்கிய உலக வரைபட புத்தகத்திற்காக, மாணவர்களிடம் தலா, 10 ரூபாய் வசூலித்தாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கல்வித்துறை இயக்குனரின் உத்தரவின் பேரில், அதிகாரிகள் குழுவினர், பள்ளியில் விசாரணை நடத்தினர்.
இதில், அரசு வழங்கிய அனைத்து நலத் திட்டங்களுக்காகவும், மாணவர்களிடம் பணம் வசூலித்ததும், புதிய மாணவர்களைச் சேர்க்க கட்டணம் வசூலித்ததும் தெரியவந்தது. இதுகுறித்த அறிக்கையை, அதிகாரிகள் குழுவினர்,கல்வித்துறை இயக்குனருக்குப் பரிந்துரை செய்தனர்.
அதன் அடிப்படையில், பள்ளிக் கல்வித்துறை கூடுதல் இயக்குனர் சசிகலா, கடந்த மார்ச் மாதம் விசாரணை நடத்தினார். இதில், புகார் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் மணிவண்ணனை, தற்காலிக பணி நீக்கம் செய்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தேவராஜ் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக