லேபிள்கள்

27.7.14

10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்குப் பரிசு - விளக்கம்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்து விளக்கம்.

# 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் பி.சி., எம்.பி.சி., சீர் மரபினர் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறதா?

மாநில மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் தலா ஒரு மாணவர், மாணவிக்கு பரிசு வழங்கப்படுகிறது.




மாநில அளவில்:

பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பி.சி. மாணவருக்கு ரூ.3000, எம்.பி.சி. மற்றும் சீர்மரபினருக்கு ரூ.5000 வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பி.சி. மாணவர்களுக்கு ரூ.1500, எம்.பி.சி. மற்றும் சீர்மரபினருக்கு ரூ.3000 வழங்கப்படுகிறது.

மாவட்ட அளவில்:

பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பி.சி. பிரிவினருக்கு ரூ.1500, எம்.பி.சி. மற்றும் சீர்மரபினருக்கு ரூ.3000 வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் பிரிவை சேர்ந்த தலா ஒரு மாணவ, மாணவிக்கு பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி பி.சி. பிரிவினருக்கு முதல் பரிசாக ரூ.500, இரண்டாம் பரிசாக ரூ.250, மூன்றாம் பரிசாக ரூ.150 வழங்கப்படுகிறது. எம்.பி.சி., சீர் மரபினருக்கு முதல் பரிசாக ரூ.1000, இரண்டாம் பரிசாக ரூ.500, மூன்றாம் பரிசாக ரூ.300 வழங்கப்படுகிறது.

# மேற்கண்ட பிரிவினருக்கு இதுபோல வேறு ஏதாவது பரிசுகள் வழங்கப்படுகிறதா?

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா நினைவு விருது திட்டம் மூலம் பரிசு வழங்கப்படுகிறது. தந்தை பெரியார் நினைவு விருது திட்டத்தின்படி தொழில்நுட்ப பயிலகங்களில் மூன்றாண்டு பட்டயப் படிப்பு (பாலிடெக்னிக்) படிக்கும் பி.சி., எம்.பி.சி., சீர்மரபினருக்கு அவர்கள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படுகிறது.

# பேரறிஞர் அண்ணா நினைவு விருது திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பரிசு எவ்வளவு?

பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம் படிக்கும் பி.சி., எம்.பி.சி. மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு (மாவட்டத்துக்கு தலா 2 மாணவ, மாணவிகள்) படிப்புச் செலவுக்காக ஆண்டுக்கு ரூ.3000 வழங்கப்படுகிறது.

# பரிசுத் தொகை பெற நிபந்தனைகள் உண்டா?

மேற்கண்ட எந்த பரிசுத் தொகையைப் பெறுவதற்கும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகம் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பரிசுத் தொகை அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் வழங்கப்படும். இந்த பரிசுத்தொகையைப் பெற வருமான உச்சவரம்பு கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக