லேபிள்கள்

30.7.14

மாறுமா பெற்றோர் மனப்பாங்கு

"ஏழை சிறுவர்கள் கல்வியை நாடி வர முடியாவிட்டால், கல்வி தான் அவனை நாடிப்போக வேண்டும்,” என்று கூறினார் காமராஜர். அந்த வகையில் 56 ஆண்டுக்கு முன்பு, கல்வியை ஏழையை நோக்கி போக செய்தார் அவர். 1954-ல் தமிழகத்தில் தொடக்க கல்வியின் நிலை,
எந்தெந்த மாவட்டத்தில் பள்ளிகள் இல்லை, இவற்றை களைய என்ன வழி? தொடக்க கல்வி ஆசிரியர்களின் தகுதி, பயிற்சி மற்றும் ஆசிரியர்களின் மேம்பாட்டிற்கான வழி என்ற ஆய்வை நடத்தினார். இதற்காக ஒரு குழுவை அமைத்தார். இந்த குழு தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, 1995-ல் தனது பரிந்துரைகளை அரசிடம் அளித்தது.

கட்டாயக்கல்வி: ஆனால், பரிந்துரைக்காக காத்திருக்காமல், அதற்கு முன்பே பல்வேறு தொடக்க பள்ளிகள் தொடங்கப்பட்டன. 500 பேர் வாழும் சிற்றூர்களில் எல்லாம், கல்வி சாலைகள் திறக்கப்பட்டன. ஊரில் உள்ள மக்களிடத்தில் கல்வி மேம்பாடு குறித்து எடுத்து சொல்லப்பட்டது. பள்ளி கட்டடங்கள் வாடகை இன்றி பெறப்பட்டன. 1960ல்,
மாநிலத்தின் மூன்றில் ஒரு பகுதியில், 6-லிருந்து 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வந்த காலத்தில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கட்டாயக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசிரியர்கள் நலன் காத்திட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து வந்த அரசுகள், கல்வி தரத்தை மேம்படுத்தவும், புதிய பள்ளிகளை தொடங்கவும் பல்வேறு முயற்சிகள் எடுத்து அதில் வெற்றியும் கண்டது. அரசு பள்ளியில், படித்து ஐ.ஏ.எஸ்., ஆனவர்கள் ஏராளம்.

ஆங்கில மோகம்: கடந்த 10 ஆண்டுக்கு முன்பு வரை, அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிக அளவில் இருந்தது. தனியார் மெட்ரிக் பள்ளிகள் ஏராளமாக ஆரம்பிக்கப்பட்டன. காலச்சக்கரத்தின் சூழ்ச்சிக்கு மெல்ல, மெல்ல அரசு பள்ளிகள் பலியாக தொடங்கின. இன்றைய சூழ்நிலையில், அரசு பள்ளிகளில், மாணவர், கற்றல், கற்பித்தலுக்கு தேவையான அனைத்து வசதிகளும், மற்ற மாநிலங்களை விட மேம்பட்ட அளவிலேயே உள்ளன. கல்வி இணை செயல்பாடுகள், விளையாட்டுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தும் மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆங்கில வழி கல்வி மோகமே மாணவர் குறைவுக்கு காரணம் என கூறியதால், அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசு தரும் விலையில்லா பொருட்களை பெறுவதற்கு போட்டி போடும் மக்கள், அதே அரசு தரும் இலவச கல்வியை பெற தயக்கம் காட்டுகின்றனர். ஆசிரியர் பற்றாக்குறை முன்பு அதிக அளவில் இருந்தது. கட்டாய கல்வி உரிமை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, ஆசிரியர், மாணவர் விகிதத்தை விட, ஆசிரியர் எண்ணிக்கை கூடுதலாகவே உள்ளது. தற்போது பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, ஆசிரியர்கள் பற்றாக்குறையை இல்லை, என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் இடை நிலை கல்வி திட்டத்தின் மூலம், ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதுடன், பள்ளிக்கும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம், தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே உள்ளது. இதனால், அவற்றின் தரம் தனியார் பள்ளிகளை விஞ்சும் அளவில் உயர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், மாணவர் சேர்க்கை குறைந்து வருவது பெற்றோர்களின் மனதில் இடம் பிடிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

ஆசிரியர்களின் பங்களிப்பு: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது, அந்தந்த ஆசிரியர்களின் கையிலேயே உள்ளது. ஆசிரியர் சொல்லி ஊரே ஓட்டு போட்ட காலம் எல்லாம் நம்மை கடந்துள்ளது. இன்று, உள்ளூரில் இருக்கும் ஊராட்சி தலைவரின் பெயர் கூட தெரியாமல், பஸ்சில் ஏறி சென்று கடமை முடிந்தவுடன், சிட்டாக நம் ஊருக்கு வந்து விடுகிறோம். நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரிந்தால் தான் நம் மாணவரை, நாம் உளி கொண்டு செதுக்க முடியும். கடமையாக பணியை செய்யாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் வகுப்பறையை கொண்டு செல்ல வேண்டும். ஆசிரியர் -- மாணவர் உறவு ஊரார் போற்றும் வகையில் அமைய வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சலுகைக்காக என்பதை தவிர்த்து, தரத்திற்காக என்ற நிலையை உருவாக்க வேண்டும். என் மாணவன் முன்னேற வேண்டும் என்று உழைக்க வேண்டும். மூங்கில் காட்டில் புல்லாங்குழலை தேடும் வேலை இது. மனிதம் வாழ அறிவை தந்திடும் மகத்துவம் நிறைந்த வேலை. ஈன்ற குழந்தை 'அம்மா' என்றால், அன்னை மகிழ்ந்திடுவார். சான்றோனானால் 'தந்தை' மகிழ்ந்திடுவார். ஆனால், அவன் சான்றோன் ஆனதற்கு காரணம் யார் எனக் கேட்டால், அது அந்த ஆசிரியரையே சாரும். ஆயிரம் ஆண்டுகள், ஆயிரம் பிறவிகள் எடுத்தாலும், அத்தனை பிறவியிலும் ஆசான் பணியை செய்திட விரும்புகிறேன், என்ற மன நிறைவு அடையுமளவுக்கு ஆசிரியர் பணியை
செய்திடல் வேண்டும்.

பெற்றோர் பங்களிப்பு: அரசு பள்ளியில் சேர்த்தால் படிப்பு வரவில்லை, என்பதற்கு காரணம் ஆசிரியர் மட்டுமல்ல; அவன் பெற்றோரும் தான். பள்ளிக்கு அனுப்புவதோடு நின்று விடாமல், குழந்தைகளின் பள்ளி செயல்பாடுகளை ஆராய்ந்து அவனை தினமும் கண்காணிக்க வேண்டும். நாம் படிக்கவில்லை என்றாலும், அவன் படிக்கிறானா? என்பதை சம்பந்தப்பட்ட பள்ளியில் சென்று கேட்டறிய வேண்டும். நாம் வழங்கும் வரிப்பணம் தான், அரசு சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த வரிப்பணத்தை, நாம் செலவழிக்க முன் வராவிட்டால் யார் முன்வருவார். வீட்டு வேலை செய்து கஷ்டப்படுவோரும், தன் மகன் ஆங்கில பள்ளியில் படிக்கிறான் என்ற பெருமை கொள்கின்றனர். அந்த கல்வியை இலவசமாக தரும் அரசை ஏன் நாடுவதில்லை. பெற்றோர்களின் மனப்பாங்கு மாற வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக