லேபிள்கள்

31.7.14

பாவூர்சத்திரத்தில் அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்

பாவூர்சத்திரத்தில் அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரைத் தாக்கிய மர்மநபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் பாடப்பிரிவில் முதுநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் அ.ஜெயக்குமார் (36), இவருக்கும் அதே பள்ளியில் பணியாற்றி வரும் வேறு ஒரு ஆசிரியருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை மாலையில் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் முடிந்து ஆசிரியர் ஜெயக்குமார் வகுப்பறையை விட்டு நடந்து வந்து கொண்டிருந்தாராம்.
அப்போது பள்ளிக்குள் புகுந்த மர்மகும்பல் ஒன்று ஆசிரியர் ஜெயக்குமாரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக சக ஆசிரியர்கள் மீட்டு அருகேயுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர்.பின்னர் அவர் தீவிர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயக்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, ஆசிரியரைத் தாக்கிய மர்மநபர்களைத் தேடி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக