விருதுநகர்மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளிகளில், 20 சதவீதம் மாணவர்களுக்கு அடிப்படை கணிதமே தெரியாது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் வெளியாகி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில், முதல் இடத்தில் இருந்து, மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், 10ம்வகுப்பு தேர்ச்சி சதவீதத்தில் 4ம் இடத்தையே பிடித்தது. பிளஸ் 2வில் 28 ஆண்டுகால சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதால் கல்வியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனிடையே 1 முதல் 5ம்வகுப்புவரை துவக்கப் பள்ளிகளில் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணிதத்தில் அடிப்படை சரியாக இல்லாததே, பிளஸ் 2 மற்றும் 10ம்வகுப்பில் தேர்ச்சி சதவீதம் குறைய காரணம் என கண்டறியப்பட்டது. இதன்படி மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளி மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் எழுதும் மற்றும் வாசிக்கும் திறன், கணித அடிப்படை திறன் குறித்து ஆசிரிய பயிற்றுனர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.
தமிழ் வாசிப்பு, எழுதுதல் திறன்: 2013ல் 641 பள்ளிகளில் 404 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 61,878 மாணவர்களிடம் ஆய்வு மேற்கொண்டதில் 60 சதவீத பேருக்கு மட்டுமே தமிழ் வாசிக்கும் திறன் இருந்தது கண்டறியப்பட்டது. 2014ல், 488 பள்ளிகளில் 50,492 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் 73 சதவீதம் பேருக்கு மட்டுமே தமிழ் வாசிக்கும் திறன் இருந்தது தெரியவந்தது.
2013ல் 1,186 பள்ளிகளில் 982 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 69,267 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 60 சதவீத்தினருக்கு மட்டுமே தமிழில் எழுதுதல் திறன் இருப்பது கண்டறியப்பட்டது. 2014ல் 918 பள்ளிகளில் 64,089 மாணவர்களின் நடத்தப்பட்ட ஆய்வில் 73 சதவீத்தினரிடம் மட்டுமே தமிழ் எழுதுதல் திறன் இருப்பது தெரியவந்தது.
ஆங்கில வாசிப்பு, எழுதுதல் திறன்: 2014ல் 1,186ல் 918 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 64,089 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 66 சதவீதம் பேருக்கு மட்டுமே ஆங்கில வாசிப்புத்திறன், 61 சதவீதத்தினருக்கு மட்டுமே ஆங்கில எழுதுதல் திறன் இருப்பது கண்டறியப்பட்டது.
அடிப்படை கணிதம்: 2014ல், 918 பள்ளிகளில் 64,089 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 80 சதவீதம் பேர் மட்டுமே அடிப்படை கணிதம் தெரிந்து வைத்துள்ளனர். மீதம் 20 சதவீதம் பேருக்கு அது தெரியவில்லை என கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் 6 முதல் 8ம்வகுப்புவரை 699 நடுநிலைப் பள்ளிகளில் 484 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் 50,492 மாணவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் 83 சதவீதத்தினர் தமிழில் வாசிக்கும் திறன், 69 சதவீதத்தினர் ஆங்கிலத்தில் வாசிக்கும் திறன் பெற்றிருந்தனர். 76 சதவீதத்தினர் தமிழில் எழுதும் திறன், 63 சதவீதத்தினர் ஆங்கிலத்தில் எழுதும் திறன் பெற்றிருந்தனர். 83 சதவீதத்தினருக்கு அடிப்படை கணிதம் தெரிந்தது. 73 சதவீதத்தினர் கடின கணக்குகளை செய்யும் திறன் பெற்றிருந்தனர்.
மாவட்ட தொடக்க கல்வித்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு வராதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் அடிப்படை கல்வியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வருங்காலத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்பில் பள்ளிகளின் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் கடுமையாக குறைய வாய்ப்புள்ளது. இதை சரிகட்ட இப்போதே நன்கு கற்பிக்க ஆசிரியர்கள் தயாராக வேண்டும். மாணவர்கள், பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக