சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கற்றுத் தரப்படும் விளையாட்டு மற்றும் யோகா போன்ற உடற்பயிற்சிகளுக்கு, சேவை வரி செலுத்த வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளதற்கு, பெற்றோரிடம் கடும் எதிர்ப்பு
கிளம்பி உள்ளது. மத்திய பள்ளிக்கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படுகிறது. இவ்வாரியத்தின், அங்கீகாரம் பெற்ற சி.பி.எஸ்.இ., பள்ளிகள், நாடு முழுவதும் உள்ளன. இவற்றில், லட்சக்கணக்கான மாணவர் படிக்கின்றனர். இப்பள்ளிகளின், கட்டட வாடகை மற்றும் பாடத் திட்டத்தைத் தவிர, மாணவர்களுக்கு போதிக்கப்படும், யோகா, கர்நாடக சங்கீதம், நடனம், கிரிக்கெட், கைப்பந்து, கராத்தே உள்ளிட்டவற்றுக்கு, சேவை வரி செலுத்த வேண்டும் என, மத்திய நிதித் துறை உத்தரவிட்டு உள்ளது. பாடத் திட்டத்தைத் தவிர, இதர பயிற்சிகள் அனைத்துக்கும், 75 சதவீத சேவை வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவால், ஒரு மாணவனுக்கு, ஒரு ஆண்டுக்கு கூடுதலாக, 4,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. சேவை வரியை, பள்ளி நிர்வாகம் செலுத்த வேண்டிய நிலையில், இத்தொகையை, மாணவர்களிடம் வசூலித்து செலுத்த, பள்ளிகள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து, சென்னையில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
மத்திய அரசின், 2014 15 பட்ஜெட்டில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளின், வாகனங்கள் மற்றும் பள்ளி வளாகத்தில் உள்ள, 'கேன்டீனுக்கு' சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், பாடத்திட்டத்தைத் தவிர, பிற துறைகளில் அளிக்கப்படும் பயிற்சிக்கு, 75 சதவீத சேவை வரி விதிக்கப்பட்டு உள்ளது. இத்தொகையை, மாணவர்களிடம் இருந்து தான் வசூலித்து செலுத்துவோம். இதன் மூலம், ஆண்டு பள்ளிக் கட்டணம், 4,000 ரூபாய் வரை அதிகரிக்கும். இதுகுறித்து, பெற்றோருக்கு தெரிவித்துள்ளோம். அதேநேரத்தில், 'இந்த சேவை வரியை ரத்து செய்ய வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில், மத்திய கல்வி மற்றும் நிதித் துறை அமைச்சர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார். பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கை ஒருபுறம், மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோருக்கு, பெற்றோரும் தனித்தனியாக கடிதங்களை எழுதியுள்ளனர்.
இதுகுறித்து, சென்னை மயிலாப்பூரில் உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவரின் பெற்றோர் கூறியதாவது: பாடத் திட்டம் மட்டுமல்லாமல், பிற துறைகளிலும் இளைஞர்கள் திறன் பெற்றிருக்க வேண்டும் என்பது, கட்டாயமாகி வருகிறது. ஆண்டு கல்விக் கட்டணத்தைத் தவிர, இதர திறன்களை வளர்த்துக் கொள்ள, தனிக் கட்டணம் செலுத்தி வருகிறோம்.
இக்கட்டணங்களுக்கு சேவை வரி விதிப்பது என்பது, மேலும் சுமையை அதிகரிக்கும்.
தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தின் மீது, பெற்றோர் கவனம் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு விதிக்கும், புதிய சேவை வரி, கல்வி கட்டணத்தை அதிகரிக்க செய்யும்.
எனவே, மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, புதிய சேவை வரியை, மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக