லேபிள்கள்

19.10.14

பட்டப்படிப்புக்கு முன்பு பிளஸ்-2 படிக்காத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

பட்டப்படிப்புக்கு முன்பு பிளஸ்-2 படிக்காத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தகுதியுடன், ஆசிரியர் பயிற்சி முடித்த தர்மன் உட்பட 6 பேர் கடந்த 1985-87-ம் ஆண்டுகளில் அரசுப்பள்ளி ஆசிரியராக நியமிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் நடத்திய நுழைவுத் தேர்வை எழுதி பாஸ் செய்து, பி.லிட், பட்டம் பெற்றனர். அதன் பின்னர் பி.எட். படித்து முடித்தனர்.

இந்த நிலையில், 131 தமிழ் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை கடந்த ஆண்டு ஜனவரியில் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. அந்தப்பட்டியலில் தர்மன் உட்பட 6 பேரின் பெயர் இல்லை. எனவே, பள்ளிக் கல்வித்துறையிடம் முறையிட்டனர்.

பிளஸ்-2 படிக்காமல் பட்டம் படித்துள்ளதால், அதை பதவி உயர்வைப்பெறும் தகுதியாகக் கருத முடியாது என்று அந்தத் “துறை கூறிவிட்டது. இதுகுறித்து ஐகோர்ட்டில் 6 பேரும் மனு தாக்கல் செய்தனர். அதில், யு.ஜி.சி. (பல்கலைக்கழக மானியக்குழு) விதிகளின்படி எங்களுக்கு பதவி உயர்வு பெறும் தகுதி உள்ளதால் பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

யு.ஜி.சி. விதிப்படி, பிளஸ்-2 முடித்துவிட்டு பட்டப்படிப்பில் சேரலாம். பிளஸ்-2 படிக்கவில்லை என்றால், பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இரண்டாவது முறைப்படி மனுதாரர்கள் பட்டம் படித்துள்ளனர்.

அதன்பிறகு அவர்கள் பிளஸ்-2-விலும் தேர்ச்சி பெற்றனர். ஆனாலும் யு.ஜி.சி. முறைப்படியே அவர்கள் பட்டம் படித்தனர். அதை அவர்கள் படித்த பல்கலைக்கழகங்களும் ஏற்றுள்ளன. எனவே, மனுதார்கள் பெற்ற பட்டம் செல்லும். அதன்படி, மனுதாரர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியானவர்கள். எனவே பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு 8 வாரங்களுக்குள் பதவி உயர்வு அளிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக