லேபிள்கள்

21.10.14

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அதிகாரம்: தமிழக அரசு

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அதிகாரம் வழங்கும் வகையில், கட்டாய கல்வி உரிமை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தகவலை, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் யார்?: சென்னை, திருமுல்லைவாயலைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் தாக்கல் செய்த மனு: கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்தபின், அனைத்துப் பள்ளிகளும், மாநில அரசிடம் இருந்து அங்கீகாரம் பெற வேண்டும். இந்த சட்டத்தின் கீழ், விதிமுறைகள் வகுக்கப்படும்போது, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரி யார் என்பதை நிர்ணயிக்க தமிழக அரசு தவறி விட்டது.

பள்ளி கல்வித்துறை, கடந்த 2011, ஏப்ரலில் பிறப்பித்த அரசாணையில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், குற்றங்களுக்கான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கு, அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து இருந்தது. அதில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இடம் பெறவில்லை. தமிழக அரசின் அங்கீகாரம் பெறாமல், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன.

இந்தப் பள்ளிகள் மீது, கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. அங்கீகாரம் பெறாமல் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்க முடியாது. எனவே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு எதிராக, கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில், உரிய பிரிவுகளை கொண்டு வர உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

விசாரணை: இம்மனு, தலைமை நீதிபதி எஸ்கே. கவுல், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜரானார். பள்ளி கல்வித்துறை சார்பில், சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார், தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை தாக்கல் செய்தார். அந்த அறிவிப்பாணையில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை விதிகளில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம், பள்ளி கல்வி இயக்குனருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மனு பைசல்: இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், பதில் மனுத் தாக்கல் செய்தபின், மாநில அரசு, கடந்த மாதம் 19ம் தேதி, அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதை அமல்படுத்து வதை தவிர, மேற்கொண்டு எந்த உத்தரவும் தேவையில்லை என, மனுதாரரின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். மனு, பைசல் செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக