லேபிள்கள்

2.12.14

யுஜிசி ஆராய்ச்சி உதவித் தொகையை உயர்த்தி அறிவிப்பு

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் வழங்கப்படும் கல்வி, ஆராய்ச்சி உதவித் தொகையை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உயர்வு டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் யுஜிசி தெரிவித்துள்ளது.

கல்வி, ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு உதவித் தொகைத் திட்டங்களை மத்திய அரசு யுஜிசி வாயிலாக செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த நவம்பர் 17-ஆம் தேதி நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் அனைத்து வகை கல்வி உதவித் தொகைகளும் உயர்த்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஓய்வு பெற்ற பிறகும் ஆராய்ச்சியில் சிறப்பாக ஈடுபட்டு வரும் பேராசிரியர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.31 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோல, முழுநேர ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் பெண்களுக்கான உதவித் தொகை முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 38,800 என்ற அளவிலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாதம் ரூ. 46,500 என்ற அளவிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

குடும்பத்தில் தனி பெண் குழந்தையாக இருந்து ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்பவர்களுக்கான உதவித் தொகை மாதம் ரூ. 8 ஆயிரத்திலிருந்து ரூ. 12,400-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மாதம் ரூ. 15,500 என்ற அளவில் உயர்த்தி வழங்கப்படும்.

குடும்பத்தில் தனி பெண் குழந்தையாக இருந்து முதுநிலைப் பட்டப் படிப்பை மேற்கொள்பவர்களுக்கும், பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்று முதுநிலை பட்டப் படிப்பு மேற்கொள்பவர்களுக்கும் இதுவரை மாதம் ரூ. 2 ஆயிரம் என்ற அளவில் 20 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. இந்தத் தொகை இப்போது ரூ. 3,100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுபோல, பிற கல்வி உதவித் தொகைகளும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரங்கள் www.ugc.ac.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக