லேபிள்கள்

4.12.14

கணினிப் பயிற்றுநர்கள் நியமிக்க டிஆர்பி அறிவிப்பு: ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இடைக்கால விதிகளின்படி கணினிப் பயிற்றுநர்கள் நியமனம் செய்வதற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மதுரையைச் சேர்ந்த எஸ்.ஷோபனா, எல்.தீபால் ஆகியோர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதன் விவரம்:

தமிழக பள்ளிகளில் மேல்நிலைக் கல்வியில் தொழிற்பாடப் பிரிவாக கணினி அறிவியல் பாடம் 1984-85-இல் அறிமுகம் செய்யப்பட்டது. இப் பாடப் பிரிவுகளுக்கு கணினி பயிற்றுநர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வித் துறையால் இடைக்கால விதிகள் கொண்டுவரப்பட்டன. நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், கணினி அறிவியல் பாடத்தை இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களைப் போல பிரதானப் பாடமாக 2004-இல் தமிழக அரசு கொண்டு வந்தது.

அதேநேரம், கணினி அறிவியல் பாடத்துக்கான ஆசிரியர்களை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்ய சிறப்பு விதிகளை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால், கணினி அறிவியல் பாடத்துக்கான ஆசிரியர்கள் இன்னும் கணினி பயிற்றுநர்கள் என்று தான் அழைக்கப்படுகின்றனர்.

மேலும், ஏற்கெனவே உருவாக்கப்பட்ட சிறப்பு விதிகளின் அடிப்படையில், குறைவான கல்வித் தகுதி உடையவர்களே நியமனம் செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கை, மேற்படி பணிக்குத் தகுதியுடையவர்களின் உரிமைகளை மறுப்பதாகவும், பாகுபாடு காட்டுவதாகவும் உள்ளது.

கணினி பயிற்றுநர்களை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாகக் கருத வேண்டும். மேலும், அந்தப் பணியிடத்தில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கல்வித் தகுதி அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்.

ஆகவே, இடைக்கால விதிகளின்படி, கணினி பயிற்றுநர்கள் நியமனம் செய்வதற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.வேணுகோபால், இதற்குப் பதில் அளிக்குமாறு பள்ளிக் கல்வித் துறைச் செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக