லேபிள்கள்

3.12.14

முதல்வர், ஓ.பன்னீர்செல்வமும், நானும் ஒரே ஊரு...: அலப்பறை செய்யும் டி.இ.ஓ.,!

முதல்வர், ஓ.பன்னீர்செல்வமும், நானும், ஒரே ஊர்காரங்க... பார்த்துக்குங்க...' என, மைக்கில் அறிவிப்பு வெளியிடாத குறையாக, பெரிய, 'அலம்பல்' செய்து வரும், கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்ட அலுவலரால், சர்ச்சை வெடித்துள்ளது.


கல்வித் துறை சார்பில், பல்வேறு இலவச பொருட்கள், மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இது தொடர்பான விழாக்களில், ஈரோடு, கோபி பகுதி வி.ஐ.பி.,க்கள் பலர், ஆர்வத்துடன் கலந்து கொண்டாலும், கோபி கல்வி மாவட்ட அலுவலர், சிவாஜி மட்டும், தொடர்ந்து, 'ஆப்சென்ட்' ஆகி வருகிறார். ஆனால், தனியார் பள்ளிகளில் நடக்கும் விழாவில், ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். இதை தடுக்க, மாவட்ட கல்வி அதிகாரிகள் உட்பட, யாரும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சமீபத்தில், கோபி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், இலவச புத்தக பை, காலணி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவிற்கு அழைத்தும், வழக்கம் போல், டி.இ.ஓ., பங்கேற்கவில்லை. 'ஜீப் பழுதானதால், வரமுடியவில்லை' என, சமாளித்தார்.

இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: முதல்வர், ஓ.பி.பன்னீர்செல்வமும், டி.இ.ஓ., சிவாஜியும், ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். முதல்வரை, தனக்கு நெருக்கமாக, சிவாஜி காட்டிக்கொள்கிறார். இதனால், அவரை, கேள்வி கேட்க, அச்சமாக உள்ளது. இதை பயன்படுத்தி, ஆசிரியர் இடமாறுதல், கலந்தாய்வு உள்ளிட்ட பணிகளில், நேரடியாக தலையிடுகிறார். இவ்வாறு, அதிகாரிகள் புலம்பினர்.


'வாங்க... உட்கார்ந்து பேசுவோம்...':

புகார்கள் குறித்து, சிவாஜியை, மொபைலில் தொடர்பு கொண்ட போது, அவர் கூறியதாவது: ஜீப் பழுதாகி, ஒர்க் ஷாப்பில் உள்ளது. அதனால் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. முதல்வரும், நானும், தேனி தொகுதியைச் சேர்ந்தவர்கள் தான். எதுவாக இருந்தாலும், நேரடியாக வாருங்கள்; உட்கார்ந்து பேசுவோம். யாரிடம் பேசுகிறோம் என்பதை, மனதில் வைத்து பேசுங்கள். இவ்வாறு, சிவாஜி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக