திருப்புவனம் அருகே அரசுப் பள்ளியில் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவான வழக்கில்,' மனுதாரரான தலைமை ஆசிரியர் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு தனக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர் செய்த தவறுக்கு ஒட்டு மொத்த விசாரணைக்கும் தடை கோருவது துரதிஷ்டவசமானது. எப்.ஐ.ஆரை ரத்து செய்ய முடியாது,' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திருப்புவனம் அருகே மேலவெள்ளூர் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. எட்டாம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளிடம் பகுதி நேர ஓவிய ஆசிரியர் ஞான உதயம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக தலைமை ஆசிரியை சீதாவிடம் புகார் செய்தனர். நடவடிக்கை இல்லாததால் ஒரு மாணவியின் தந்தை மானாமதுரை மகளிர் போலீசில் புகார் செய்தார். குழந்தைகளை பாலியல் கொடுமைகளிலிருந்து பாதுகாக்கும் (போஸ்கோ) சட்டத்தின் கீழ் ஞான உதயம், சீதா மீது வழக்குப்பதிவு செய்தனர். சீதாவை மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்தார். பின் திரும்பப் பெற்றார். தன் மீதான வழக்கை (எப்.ஐ.ஆர்.,) ரத்து செய்யக்கோரி சீதா, ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். அரசு வக்கீல் கந்தசாமி ஆஜரானார். மனுதாரர் வக்கீல்,"மனுதாரர் மருத்துவ விடுப்பில் இருந்தபோது சம்பவம் நடந்துள்ளது. மனுதாரர் எவ்வித குற்றத்திலும் ஈடுபடவில்லை. குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக வழக்கில் சேர்த்துள்ளனர். வழக்கை ரத்து செய்ய வேண்டும்,” என்றார்.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன்: சுப்ரீம் கோர்ட் ஒருவழக்கில்,'பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கல்வி ஒரு நாட்டின் சொத்து. மனித வளர்ச்சி, கட்டுக்கோப்பான குடும்ப வளர்ச்சிக்கு பெண்களுக்கு கொடுக்கப்படும் கல்விதான் அடிப்படை. நடுத்தர வர்க்கத்தினர் தனது பெண் குழந்தைகளை இருபாலர் பள்ளியில் சேர்க்க முக்கியக் காரணம் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைதான்,' என தெரிவித்தது. மகாத்மா காந்தி,'நன்னடத்தை இல்லாத ஒரு ஆசிரியர் உப்பில்லா பண்டத்திற்கு சமமானவர். மாணவர்கள் பாடப் புத்தகங்களை படிப்பதைவிட, ஆசிரியர்களிடம்தான் அதிகம் கற்பர்,' என்றார். டாக்டர் ராதாகிருஷ்ணன்,'நம் நாட்டில் ஆசிரியர்களை குருவாகவும், ஆச்சாரியார் எனவும் கருதுகின்றனர். குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மகேஸ்வரா என அழைக்கும் வழக்கம் உள்ளது,' என்றார். குருவிற்கு சமஸ்கிருதத்தில் 'கு' என்பதற்கு அறியாமை, 'ரு' என்பதற்கு அகற்றுதல் பொருள்படும். அறியாமை என்ற இருளை அகற்றுபவர் ஆசிரியர். இவ்வழக்கில் ஓவிய ஆசிரியர், மாணவியரின் வாழ்க்கையில் இருளை புகுத்தியுள்ளார். மறைந்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி (ஓய்வு) வி.ஆர்.கிருஷ்ணய்யர்,' ஒரு பெண் குழந்தையை உடல் ரீதியான காயப்படுத்தும் போது உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியான குற்ற உணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும்,' என்றார். பெண்களுக்கு எதிரான குற்றத்தை சமூகத்திற்கு எதிரானதாக கருத வேண்டும். மனுதாரர் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு தனக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர் செய்த தவறுக்கு ஒட்டு மொத்த விசாரணைக்கும் தடை கோருவது துரதிஷ்டவசமானது. தற்போதைய நிலையில் எப்.ஐ.ஆரை ரத்து செய்ய முடியாது. மானாமதுரை மகளிர் போலீசார் விரைந்து விசாரித்து உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போலீசார் சமுதாயத்திற்கு செய்யும் கடமையாக இருக்கும். மனுதாரர் கோரிய நிவாரணத்தை இக்கோர்ட் வழங்க முடியாது. தகுந்த கோர்ட்டில் மனு தாக்கல் செய்து பரிகாரம் தேடலாம். மனு பைசல் செய்யப்படுகிறது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக