நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நேற்று ஞாயிறன்றும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் செயல்பட்டன. ஆசிரியர்களின் அதிரடி முடிவால் மாணவர்களின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில், வரும் கல்வியாண்டில், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 50 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 33 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 83 அரசு பள்ளிகள் மற்றும் சுமார் 40 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இங்குள்ள அரசு பள்ளிகளில் ஆண்டுக்காண்டு மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
கடந்த காலாண்டு தேர்வு முடிவுகளை பார்க்கும்போது, தேர்ச்சி விகிதம் 50 சதவீதத்திற்கு குறைவாகவே இருந்துள்ளது. மேலும், மலை மாவட்டம் என்பதால், அவ்வப்போது ஏற்படும் மழை மற்றும் மண்சரிவு காரணங்களால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனால், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி கல்வித் துறையின் ஒப்புதலுடன், ஞாயிறன்று வகுப்பு நடத்துகின்றனர். நேற்று மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, இந்த வாரத்தில் இருந்து ஞாயிறு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது" என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக