லேபிள்கள்

22.12.14

கணினி ஆசிரியர் பணிக்கு பி.எஸ்சி. படிப்பை பதிவு செய்யாமல் எம்.எஸ்சி., பி.எட். படிப்பை பதிவு செய்து இருந்தாலும் பரிந்துரைக்க வேண்டும் , உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

கணினி ஆசிரியர் பணிக்கு பி.எஸ்சி., படிப்பை பதிவு செய்யாமல் எம்.எஸ்சி., பி.எட்., படிப்பை பதிவு செய்து இருந்தாலும் பரிந்துரைக்க வேண்டும் என்று வேலைவாய்ப்பு அதிகாரிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்டில் மனு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் கல்யாணி(வயது 41). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-நான், 1993-ம் ஆண்டு பி.எஸ்சி கணினி அறிவியல் படிப்பையும், 1995-ம் ஆண்டு எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்பையும் முடித்தேன். பி.எஸ்சி. படிப்பை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை. எம்.எஸ்சி. படிப்பை 7.7.1995 அன்று சென்னையில்உள்ள தொழில் கல்வி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். அதன்பின்பு, பி.எட். படிப்பை முடித்து 9.1.1997 அன்று பதிவு செய்துள்ளேன். எம்.பில். படிப்பை 2005-ம் ஆண்டிலும், ஆராய்ச்சி படிப்பை(பி.எச்.டி.) 2013-ம் ஆண்டிலும் முடித்தேன். பி.எஸ்சி., கணினி அறிவியல் படிப்பை 2014-ம் ஆண்டுதான் மதுரையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன்.

827 பணியிடங்கள்

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 827 கணினி ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பஉள்ளதாக கடந்த 5.9.2014 அன்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த பணிக்கு, பி.எஸ்சி., கணினி அறிவியல், பி.எஸ்சி., தகவல் தொழில் நுட்பவியல், பி.சி.ஏ., பி.ஈ., ஆகிய பட்டப்படிப்புகளுடன் பி.எட். முடித்து இருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.இந்த பணிக்கு, எனது பெயர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்படும் என்று எதிர்பார்த்து இருந்தேன். ஆனால், எனது பெயர் பரிந்துரைக்கப்படவில்லை. காரணம் கேட்ட போது, நான் 1993-ம் ஆண்டு பி.எஸ்சி., கணினி அறிவியல் படிப்பை முடித்த போதிலும் 2014-ம் ஆண்டு தான் இந்த படிப்பை பதிவு செய்து இருப்பதால் எனது பெயர் பரிந்துரைக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நியாயமற்றது

நான், எம்.எஸ்சி., கணினி அறிவியல் மற்றும் பி.எட்., படிப்பை 1997-ம் ஆண்டு சென்னையில் உள்ள தொழில்கல்வி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். எனவே, அந்த அடிப்படையில் எனது பெயரை பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது, கணினி ஆசிரியர் பணிக்கு எம்.எஸ்சி., படிப்பு தகுதியாக நிர்ணயிக்கப்படவில்லை என்று தெரிவித்து விட்டனர்.நான், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவள். 2002-ம் ஆண்டு வரை பதிவு செய்துள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் பெயர்கள் கணினி ஆசிரியர் பணிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. நான், 1997-ம் ஆண்டு எம்.எஸ்சி., பி.எட். படிப்பை பதிவு செய்த போதிலும் எனது பெயரை பரிந்துரைக்கவில்லை. இதற்கு, அதிகாரிகள் கூறும்காரணங்கள் நியாயமற்றவை. எனவே, எனது பெயரை கணினி ஆசிரியர் பணிக்கு பரிந்துரைக்க மதுரை வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

பரிந்துரைக்க வேண்டும்

இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ஞானகுருநாதன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:-“மனுதாரரின் பெயரை பரிந்துரைக்காததற்கு அதிகாரிகள் கூறும் காரணங்கள் ஏற்புடையவை அல்ல.

மனுதாரர் பி.எஸ்சி., கணினி அறிவியல் படிப்பை 1993-ம் ஆண்டே முடித்த போதும், அந்த சமயத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறார். அதேவேளையில், மனுதாரர் எம்.எஸ்சி. படிப்பை 1995-ம் ஆண்டும், பி.எட். படிப்பை 1997-ம் ஆண்டும் பதிவு செய்துள்ளார். மனுதாரர் எம்.எஸ்சி., பி.எட். படிப்பை பதிவு செய்துள்ள ஆண்டு அடிப்படையில் பார்த்தால் மனுதாரரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு இருக்க வேண்டும். பி.எஸ்சி. படிப்பை பதிவு செய்யவில்லை என்று கூறி பரிந்துரைக்க மறுத்தது நியாயமற்றது. மனுதாரர் கூடுதல் கல்வித்தகுதியை பெற்றுள்ளார். எனவே, மனுதாரரின் பெயரை கணினி ஆசிரியர் பணிக்கு வேலைவாய்ப்பு அதிகாரிகள் பரிந்துரைக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக