தரம் உயர்த்தப்படும் அரசுப் பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக்குறியாகி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 6 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன.
இந்நிலையில், 4 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தி பள்ளிக் கல்வித் துறை அண்மையில் உத்தரவிட்டது.
இவ்வாறாக அடுத்தடுத்து பள்ளிகளைத் தரம் உயர்த்தும் பள்ளிக் கல்வித் துறை, தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் நிலையை ஆய்வு செய்வதில்லை என்பதே கல்வியாளர்களின் மனக்குமுறலாக உள்ளது.
குறிப்பாக அண்மையில் தரம் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் பள்ளி தரம் உயர்த்தப்பட்டதால், அருகில் உள்ள பள்ளிகளில் தேர்வு எழுதும் மாணவர்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்த வேண்டிய பரிதாப நிலைக்கு மாவட்ட கல்வித் துறை அலுவலர்கள் உள்ளனர்.
தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா? மாணவர்களுக்கு போதிய, தரமான வகுப்பறை வசதிகள், ஆய்வக வசதிகள் உள்ளனவா? மாணவ, மாணவிகளுக்கென தனித்தனி கழிப்பறை வசதிகள் உள்ளனவா? என்பது குறித்து எந்த ஆய்வும் கல்வித் துறை நடத்துவது இல்லை என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.
பெயரளவுக்கு பள்ளிகளைத் தரம் உயர்த்தி விட்டு, மாணவர்களையும், ஆசிரியர்களையும் கல்வித் துறை பாழ்படுத்தி வருவதாக கல்வியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளிலேயே இப்போது வரை எந்த கூடுதல் கட்டடங்களோ, அடிப்படை வசதிகளோ செய்து தராத நிலைதான் தொடர்கிறது.
எடுத்துக்காட்டாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட வாலாஜாபாத் அருகே உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நெய்யாடுபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியைக் கூறலாம்.
அங்கு இதுவரை கூடுதல் வகுப்பறைகளோ, கழிப்பறை வசதிகளையோ ஏற்படுத்தித் தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலாஜாபாத் அருகே தம்மனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகள் என்று பார்த்தால் எதுவும் இல்லை. இருக்கும் வகுப்பறைகளும் சேதம் அடைந்து உள்ளன. மாணவர்களுக்குத் தேவையான மேஜை, நாற்காலிகள் இல்லை. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான ஆய்வக வசதி இல்லை. கழிவறை வசதிகள் இல்லை. இவ்வாறாக எதுவுமே இல்லாத இந்தப் பள்ளியை தரம் உயர்த்துவதன் மூலம் மாணவர்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதேநிலைதான் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ள அனைத்துப் பள்ளிகளின் நிலையும் உள்ளது.
எனவே ஒரு பள்ளியை தரம் உயர்த்தும்போது, போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு, ஏழை மாணவர்களுக்கும் தரமானக் கல்வியை போதிக்க கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை கல்வியாளர்கள் எழுப்புகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக