லேபிள்கள்

21.12.14

பள்ளி வன்முறைக்கு எதிராக வீதிக்கு வந்த ஆசிரியர்கள்!

'ஆசிரியர்களுக்கும், பள்ளிகளின் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும்வகையில், தமிழக அரசு உடனடியாக சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில், நாளுக்கு நாள் பள்ளிகளில் நடக்கும் வன்முறையின்காரணமாக, ஆசிரியர்கள் பீதியில் உள்ளனர். இதனால், பள்ளியில் நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கு எதிராகவும், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலும், கோவை செஞ்சிலுவை சங்கம் முன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழக தமிழாசிரியர்கள், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட, 18 சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், பள்ளிக்கல்வி விதிகள் திருத்தம் செய்தல், பள்ளிகளில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து முழுமையாக விசாரணை நடக்கும் முன்பு தலைமையாசிரியர்களை பணி இடைநீக்கம் செய்வதை தவிர்த்தல், தவறு செய்பவர்கள்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாணவர்களின் தவறான பாதைக்கு காரணமான, ஆபாச வலைதளங்களை மத்திய அரசு தடை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில், வலியுறுத்தப்பட்டன. கல்வீராம்பாளையம் அரசு பள்ளி தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் உட்பட, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக