ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், அரசுப்பள்ளிகள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செயல்வழி கற்றல், படைப்பாற்றல் கல்வி போன்ற பல்வேறு புதிய யுக்திகளையும் புகுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழக அரசு முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தியது. இத்திட்டத்தின் படி, ஜூன் மாதம் முதல் செப்., வரை முதல் பருவம், அக்., முதல் டிச., வரை இரண்டாம் பருவமும், ஜன., முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவம் என பிரிக்கப்பட்டு, புத்தகங்கள் வினியோகிக்கப்படுகின்றன.
இத்திட்டம் கடந்த இரண்டு ஆண்டாக நடைமுறையில் உள்ளன. இதில், மாணவர்களுக்கு பற்றாக்குறை ஏற்படாத வகையில், புத்தகங்கள் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் இரண்டு பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன. தொடர்ந்து, மூன்றாம் பருவ பாடபுத்தகங்கள் வினியோகிப்பதற்காக தற்போது பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அலுவலகத்தில் கடந்த மாதம் இருப்பு வைக்கப்பட்டன.
பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது: ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் பருவம் நிறைவடைய உள்ளதால், மூன்றாம் பருவ பாட புத்தகம் வரவழைக்கப்பட்டுள்ளன. ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று முதல் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வினியோகிக்கும் பணிகள் துவங்கின. மொத்தம் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள 18 ஆயிரத்து 491 மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வினியோகிக்கப்படுகின்றன.தொடர்ந்து, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கு மாணவர்கள் வரும் போது, மூன்றாம் பருவ புத்தகங்கள் அவர்களிடம் இருக்கும் வகையில் வினியோகிக்கப்படும். இவ்வாறு கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக